"ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35 இல்ல.. ரூ.32.47தான்.." - அமைச்சர் நிர்மல்குமார்
மழை தொடங்கியதால் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது நேற்றிலிருந்து குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “மழை பெய்வதால் 1,000 மெகாவாட் மின்சாரத்தின் தேவை குறைந்துள்ளது. மின் தேவையை பூர்த்தி செய்ய நீண்டகால டெண்டர்கள் கோரப்படும். வெளி சந்தையில் மின்சாரம் வாங்குவதை குறைத்துள்ளோம். தேவை குறைந்தால் டெண்டரை நிறுத்திக் கொள்வதாகவே கூறப்பட்டுள்ளது. பீக் ஹவர்ஸ்க்கு மட்டுமே வெளி சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. மழை தொடங்கியதால் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது குறைக்கப்பட்டுள்ளது. டெண்டர் Rate படி ஒரு யூனிட் ரூ.35க்கு Fix பண்ணதா சொல்றீங்க. ஆனா ரூ.32.47க்குதான் இறுதி செஞ்சிருக்கோம். இன்னும் விலையை குறைக்க பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்கோம்.
தூத்துக்குடி அனல் மின் நிலையம் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படும். புறம்போக்கு தவிர்த்து மற்ற இடங்களில் புதிய மின் இணைப்பு தரப்படும். புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு நிபந்தனையுடன் மின்இணைப்பு வழங்கப்படும். நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு மின் இணைப்பு தரமுடியாது” என்றார்.