முதுமலையின் புகழ்பெற்ற 'ரிவால்டோ' யானை உயிரிழப்பு - சோகத்தில் நீலகிரி மாவட்டம்..!
நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள மாவனல்லா, பொக்காபுரம் பகுதி மக்களின் செல்லப் பிள்ளையாக இருந்து வந்த ஆண் காட்டு யானை ரிவால்டோ தனது 50 வயதில் இன்று உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம் முதுமலை – மசினகுடி பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட காட்டு ஆண் யானை ரிவால்டோ இன்று (பிப்ரவரி 13, 2026) உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது.
ஒரு காட்டு யானைக்கும், கிராம மக்களுக்கும் அப்படி என்ன பந்தம்? காடுகளில் கம்பீரமாக சுற்றி திரிந்த ரிவால்டோ, மக்களின் செல்லப்பிள்ளையான பின்னனி என்ன? என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மசினகுடி பகுதியில் சீகூர் ஓடை ஓடுகிறது.. அதன் அருகே டேவிடர் என்பவர் 1964-ல் ஒரு வீட்டைக் கட்டுகிறார். அதற்கு 'சீட்டல் வாக்' என்று பெயர் சூட்டினார். மற்ற வீடுகளைப் போல அதற்கு வேலி போடவில்லை. யானைகளும், சிறுத்தைகளும் கடந்து போகும் பாதைக்கு ஏன் வேலி போட வேண்டும்? என்று அவர் அதை செய்யவில்லை.
இந்தச் சூழலில்தான் ஒரு குட்டி ஆண் யானை அந்த வீட்டு வராண்டாவிற்கு அடிக்கடி வரத் தொடங்கியது. அவரோடு நெருங்கியது. அவர் அளவில்லாத அன்பினை அதன்மேல் பொழிந்தார். மனிதர்கள் தங்களைத் துன்புறுத்த மாட்டார்கள் என்பதை அந்த யானை அங்கேதான் கற்றுக்கொண்டது. டேவிடரின் மகன் மார்க், அந்த இளம் யானைக்கு 'ரிவால்டோ' என்று பெயரிட்டார். நாளடைவில் அந்தப் பகுதி மக்கள் அனைவருக்கும் ரிவால்டோ ஒரு 'செல்லப்பிள்ளை' ஆகிப்போனது.
2013-ம் ஆண்டு ரிவால்டோவின் வாழ்வில் ஒரு கருப்பு ஆண்டு. மார்க் டேவிடர் காலமானார். மார்க் இல்லாத அந்த வீட்டில், திறக்கப்படாத வாசலில் ரிவால்டோ பல மணி நேரம் திகைத்து நின்ற காட்சிகள் அப்போது பார்ப்பவர் கண்களைக் குளமாக்கியது.
அதே காலக்கட்டத்தில், ஒரு வேட்டைக்காரனின் கண்ணிவெடியிலோ அல்லது காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட வெடியிலோ ரிவால்டோவின் தும்பிக்கை நுனி துண்டிக்கப்பட்டது. ஒரு யானைக்கு தும்பிக்கைதான் கை, மூக்கு, வாய் எல்லாம். தண்ணீர் குடிக்கவும், கிளைகளை ஒடிக்கவும் ரிவால்டோ பெரும் போராட்டத்தை சந்தித்தது. ஆனாலும், ரிவால்டோ காட்டை விட்டு விலகவில்லை.
தும்பிக்கை காயத்தால் அவதிப்பட்ட ரிவால்டோவுக்கு மக்கள் வாழைப்பழங்களையும் உணவுகளையும் கொடுக்க ஆரம்பித்தனர். 50 வயதைக் கடந்த அந்த முதிய யானை, ஊருக்குள் வந்தாலும் ஒரு குழந்தையைக் கூட மிரட்டியதில்லை. காட்டின் ஆக்ரோஷமான குணம் அவனிடத்தில் இல்லை; மாறாக ஒரு முதிர்ந்த மனிதனின் நிதானம் இருந்தது.
வயது முதிர்வு மற்றும் சக யானைகளுடன் ஏற்பட்ட மோதலால் உடல் நலிவுற்ற ரிவால்டோ, கடந்த சில நாட்களாக நடக்க முடியாமல் போனது. வாழைத்தோட்டம் கிராமத்தில் படுத்த படுக்கையாக இருந்த ரிவால்டோவுக்கு வனத்துறை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்கவில்லை. இன்று காலை , நீலகிரி மலைகளின் காற்றோடு ரிவால்டோவின் மூச்சுக்காற்று கலந்துபோனது. ரிவால்டோவுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் வனத்துறையினர் சோகத்துடன் அஞ்சலி செலுத்தினர்.
ரிவால்டோவின் மரணம் ஒரு யானையின் இறப்பு மட்டுமல்ல. மனிதன் நினைத்தால் ஒரு காட்டு விலங்குடன் கூட அன்பால் பிணைக்கப்பட முடியும் என்பதற்கு ரிவால்டோ ஒரு வாழும் சாட்சியாக இருந்தது. மாவனல்லா மற்றும் பொக்காபுரம் காடுகள் இனி ரிவால்டோவின் கம்பீரமான பிளிறலைக் கேட்க முடியாது, ஆனால் ரிவால்டோ விட்டுச் சென்ற அந்த 'அமைதி' என்றும் அந்தப் பாதைகளில் உலவிக்கொண்டிருக்கும்.