அதிர்ச்சி ரிப்போர்ட்! தமிழ்நாட்டில் இரவு நேர வெப்பநிலை உயர்வு
தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் வேகமெடுத்துள்ள நகரமயமாக்கலால் சென்னை உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இரவு நேர வெப்பநிலை உயர்ந்து வருவதாக மாநிலத் திட்டக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வெப்ப அழுத்தம்: தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் காலநிலை மாற்றங்கள் குறித்த பத்தாண்டுகளுக்கான மதிப்பீடு என்னும் தலைப்பில் மாநிலத் திட்டக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டிலுள்ள வட்டார அளவிலான வெப்ப வெளிப்பாடு தொடர்பான விரிவான ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நிலப் பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள், குறிப்பாக நகரமயமாக்கல் மற்றும் காடழிப்பு ஆகியவை புவி வெப்பமயமாதலுக்குப் பங்களிப்பதையும் நகர்ப்புற வெப்பத் தீவு விளைவை அதிகரிப்பதையும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அதிகரிக்கும் கட்டிடங்கள் மேற்பரப்பு வெப்பநிலையை அதிகரித்து உள்ளூர் அளவிலான காலநிலையைப் பெரிதும் பாதிக்கிறது என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இவ்வாய்வின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் நிலப்பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகும்.
சென்னையின் கட்டப்பட்ட பகுதி 1985 ஆம் ஆண்டில் அதன் மொத்தப் பரப்பில் 48% ஆக இருந்த நிலையில் 2015 ஆம் ஆண்டில் 74% ஆக அதிகரித்துள்ளது. இது 30 ஆண்டுகளில் 26% உயர்வைக் குறிக்கிறது. இது நகரமயமாக்கலானது சென்னையின் வெப்பநிலை அதிகரித்ததற்கு முக்கியக் காரணி என இவ்வாய்வு குறிப்பிடுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட 389 வட்டாரங்களில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 94 வட்டாரங்களில் தீவிர வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.சென்னை, கரூர் மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் 25 வட்டாரங்கள் நீண்ட கால அடிப்படையிலும் தற்காலிக அடிப்படையிலும் வெப்ப உயர்வைச் சந்திப்பதால் இம்மாவட்டங்கள் வெப்ப அபாயத்தின் உச்சத்தில் உள்ளன. 11 மாவட்டங்களில் வெப்பநிலை மாநில சராசரியை விட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது.சென்னை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், கரூர், திருச்சி, மற்றும் மதுரை உள்ளிட்ட அடர்த்தியான நகரங்களில் இரவு நேர நில மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட இந்நகரங்களில் இரவு நேர வெப்பநிலையானது 2000-2023 இடையேயான காலங்களில் 4 °C உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் இரவு நேர வெப்பநிலை 2 °C வரை உயர்ந்திருப்பதாகவும் இவ்வறிக்கை குறிப்பிடுகிறது. கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் 17 மலைப்பகுதி வட்டாரங்களில் வெப்பநிலை உயர்ந்ததற்கு நகரமயமாக்கலும் காடழிப்புமே முக்கியக் காரணம் என்கிறது இவ்வறிக்கை.குறிப்பாக கடந்த 2000 ஆண்டு முதல் 2023 ஆண்டு வரை 3000 சதுர கிலோ மீட்டர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளது.