"மெரினா கடற்கரையில் இரவு நேரக் காப்பகம்: வீடற்ற 80 பேருக்குப் பாதுகாப்புடன் கூடிய தங்குமிடம்!"
சென்னை மெரினாவை பொறுத்தவரை இரவு 10 மணிக்கு மேலாக கடற்கரைக்கு உள்ளே செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது. இருப்பினும் சென்னை கடற்கரையின் மணல் பரப்பில் இரவு நேரங்களில் ஏராளமான வீடில்லாத பொதுமக்கள், குடும்பம் குடும்பமாக படுத்து உறங்கும் நிலை வெகு நாட்களாக நிலவி வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர், சாலையோரங்களில் தானம் கேட்பவர்கள், ஆதரவில்லாத முதியவர்கள், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் ஆவர்.
பொது வெளியில் உறங்கும் இவர்களுக்கு பாதுகாப்பாற்ற சூழல் நிலவி வந்தது. இதனை கவனத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி புதிய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.
வீடு இல்லாதவர்களுக்காக சென்னை மெரினா கடற்கரையில் இரவு நேர காப்பகம் ஒன்றை சென்னை மாநகராட்சி கட்டியுள்ளது. சென்னை மெரினா கடற்கரை அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகே 2,400 சதுர அடி பரப்பளவில் ரூ.86,20,000 மதிப்பீட்டில் புதிதாக இரவு நேர காப்பகத்தை சென்னை மாநகராட்சி அமைந்துள்ளது. காப்பக கட்டுமானப் பணி 80 சதவிகிதம் நிறைவடைந்து தற்போது காப்பகத்தை சுற்றி நடைபாதை மற்றும் சுற்றுச் சுவர் எழுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் விரைவில் முடிந்து இம்மாத இறுதிக்குள் காப்பகம் பயன்பாட்டிற்கு வரும் என சென்னை மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய காப்பகத்தை பொறுத்தவரை சுமார் 80 பேர் ஒரே நேரத்தில் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முழுவதும் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்தில் கழிப்பறை, மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தற்பொழுது பனிகாலம் என்பதால் இரவு நேரத்தில் தங்குபவர்களுக்கு பாய், தலையணை மற்றும் போர்வை உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.
இந்த இரவு நேர காப்பகத்தை பராமரிக்கும் பொறுப்பு தனியார் தொண்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இங்கு தங்குபவர்களுக்கு அம்மா உணவகத்தில் இருந்து உணவு விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.