×

“குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சமைத்து போட மாட்டேன்” என மனைவி கூறியதால் கணவன் தற்கொலை

 

குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சமைத்து போட மாட்டேன் என மனைவி கூறியதால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திருவள்ளூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (37 வயது). தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.  இவருக்கு கடந்த 4-ஆம் தேதி ஜெயஸ்ரீ (25 வயது) என்பவருடன் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் ஆனது.  கடந்த ஒரு வாரமாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.  இதையடுத்து நேற்று அதிகாலை 3 மணிக்கு கார்த்திகேயன், தனது மனைவி ஜெயஸ்ரீயை வீட்டில் படுக்கை அறையில் வைத்து வெளியே  தாழ்ப்பாள் போட்டுவிட்டு மற்றொரு அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெயஸ்ரீ ஜன்னல் கதவை திறக்க கூறி சத்தம் போட்டுள்ளார்.

எதிர் வீட்டில் வசிக்கும் கார்த்திகேயனின் பெற்றோர் மற்றும் அருகில் இருப்பவர்கள் வெளியே வந்துள்ளனர். அந்த நேரத்தில் செவ்வாப்பேட்டை போலீசார் அவ்வழியாக ரோந்து சென்றுள்ளனர். பின்னர் போலீசார் மற்றும் கார்த்திகேயனின் பெற்றோர் மாடிக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கார்த்திகேயன் தூக்குப்போட்டு தற்கொலை  செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர் உடலை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு போலீசார் உறவினரிடம் அவர் சடலத்தை ஒப்படைத்தனர் இதுகுறித்து  கார்த்திகேயன் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திருமணம் ஆன நாள் முதல் மனைவி தனிக்குடித்தனம் செல்லமாறு கணவரை வற்புறுத்தி வந்ததாகவும், மேலும் குடும்பத்தில் உள்ள கணவனின் பெற்றோர்கள் அவரின் அண்ணனுக்கு சமைத்து போட முடியாது என கூறி கணவனிடம் தகராறு செய்து வந்ததாக முதல் கட்ட விசாரணை தகவல் கூறப்படுகிறது. திருமணமான 20 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.