×

வரும் 7ம் தேதி முதல் எர்ணாகுளம் - பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில்

 

கேரளா மாநிலம் எர்ணாகுளத்துக்கு வரும் 7ம் தேதி புதிய வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட உள்ளது.

தெற்கு ரயில்வேயில் தற்போது 11 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மற்ற விரைவு ரயில்களை காட்டிலும் வேகமாகவும், சொகுசாகவும் இருப்பதால், பயணியர் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க கோரி ரயில்வே அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே, தென்மேற்கு ரயில்வே சார்பில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து தமிழகம் வழியாக கேரளா மாநிலம் எர்ணாகுளத்துக்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை வரும் 7ம் தேதி துவக்கப்பட உள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, “கர்நாடகா மாநிலம் கே.எஸ்.ஆர்., பெங்களூருவில் இருந்து தமிழகம் வழியாக கேரளா மாநிலம் எர்ணாகுளத்துக்கு புதிய வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது. அதன்படி, இந்த புதிய ரயில்சேவை வரும் 7ம் தேதி துவக்கப்பட உள்ளது. வாரத்தில் புதன்கிழமை தவிர, மற்ற நாட்களில் இந்த ரயில் இயக்கப்படும்.

கே.எஸ்.ஆர் பெங்களூரில் இருந்து காலை 5:10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் வழியாக மதியம் 1:50 மணிக்கு எர்ணாகுளம் செல்லும். அதேபோல், எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 2:20 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 11:00 மணிக்கு கே.எஸ்.ஆர்., பெங்களூருக்கு செல்லும். மூன்று மாநிலங்களையும் இணைக்கும் வகையில், இந்த வந்தே பாரத் ரயில் இயக்க உள்ளதால், பயணியரிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.