TASMAC ஊழியர்களுக்கு புதிய டிரான்ஸ்பர் பாலிசி! 3 வருடத்திற்கு ஒரு முறை கட்டாய டிரான்ஸ்பர்
டாஸ்மாக் பணியாளர்கள் ஒரே கடையில் 3 ஆண்டுகள் மட்டும் பணிபுரிய முடியும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் இத்தனை ஆண்டுகளாக இருந்து வந்த ஆள் பற்றாக்குறை, அதிக ஆள் குவிப்பு, அரசியல் பரிந்துரை டிரான்ஸ்பர் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தவெக அரசு தலைமையிலான தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (TASMAC) வரலாற்று சிறப்புமிக்க புதிய இடமாறுதல் மற்றும் பணியமர்த்தல் கொள்கை 2026-ஐ வெளியிட்டுள்ளது. TASMAC நிர்வாக இயக்குனர் நந்தகுமார் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, இந்த புதிய பாலிசி 01.11.2026 முதல் அமலுக்கு வருகிறது. இது தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் Supervisor, Salesman, Assistant Salesman ஆகிய அனைவருக்கும் பொருந்தும். இதற்கு முன்பு இருந்த அனைத்து உத்தரவுகளும் இதற்கு முரண்பட்டால் ரத்து செய்யப்படுகிறது.
இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், தலைமை அலுவலகமே ஒவ்வொரு கடையையும் அதன் செப்டம்பர் 2026 மாத சராசரி தினசரி விற்பனையை வைத்து A, B, C என மூன்று வகையாக தரம் பிரிக்கும். அந்த பட்டியலை மட்டுமே அனைவரும் பின்பற்ற வேண்டும், எந்த Senior Regional Manager-ம், District Manager-ம் அதை மாற்றக்கூடாது. அந்த தரத்திற்கு ஏற்ற குறைந்தபட்ச ஆள் எண்ணிக்கை அடிப்படையில் தான் இனி பணியமர்த்தல் நடக்கும். சீனியாரிட்டி என்பது பணியில் சேர்ந்த தேதி, பிறகு பிறந்த தேதி, பிறகு பணியில் சேர்ந்தபோது இருந்த கல்வித் தகுதி என்ற அடிப்படையில் கணக்கிடப்படும். மேலும், இந்த மாதமே ஒரு மிகப்பெரிய ஒரு முறை பகுத்தறிவு நடவடிக்கை நடக்க உள்ளது. நவம்பர் 2026 முதல் இரண்டு வாரத்திற்குள் ஒவ்வொரு மாவட்ட மேலாளரும் தங்கள் மாவட்டத்தில் எந்த கடையில் ஆள் அதிகம் உள்ளது, எந்த கடையில் ஆள் குறைவாக உள்ளது என கண்டறிந்து, அதிகம் உள்ள இடத்தில் இருந்து குறைவாக உள்ள இடத்திற்கு மாற்ற வேண்டும். இந்த முழு நடவடிக்கையும் 30.11.2026க்குள் முடிக்கப்பட வேண்டும் என கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.அதோடு மட்டுமல்லாமல், மாவட்ட கிடங்கு அல்லது மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் கிளார்க் வேலைக்கு ஆள் தேவை என்றால் மட்டுமே எழுத்துப்பூர்வ உத்தரவுடன் நியமிக்கலாம், அதுவும் ஒவ்வொரு வருட கவுன்சிலிங்கின் போதும் மறு ஆய்வு செய்யப்படும். மிக முக்கியமாக, 2028-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கவுன்சிலிங் மூலம் டிரான்ஸ்பர் நடைபெறும். ஒருவர் ஒரு கடையில் மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி 3 வருடம் முடித்துவிட்டால் அவர் கட்டாயமாக கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு மாற்றப்படுவார்.