×

புத்தாண்டு முதல் புதிய அட்டவணை : ஜனவரி 1 முதல் ரயில்களின் நேரம் மாற்றம்..!
 

 

 2026ம் ஆண்டிற்கான விரைவு, பயணியர் ரயில்களின் புதிய கால அட்டவணையை, ஜனவரியில் அமல்படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்து உள்ளது.
 

புதிய கால அட்டவணைப்படி, சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்; தாம்பரம் - கொல்லம்; சென்னை - மதுரை வைகை; சென்னை - திருநெல்வேலி; சென்னை - செங்கோட்டை பொதிகை உட்பட ஏழு விரைவு ரயில்களின் நேரம், 10 முதல் 20 நிமிடங்கள் வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
 

இதேபோல, திருநெல்வேலியில் இருந்து புறப்படும் நெல்லை விரைவு ரயில் 10 நிமிடங்கள், துாத்துக்குடியில் இருந்து புறப்படும் முத்துநகர் விரைவு ரயில், 25 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில்களின் தாமதத்தை குறைக்கவும் விரைவு ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், பல்வேறு வழித்தடங்களில் ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
 

பாதைகளை மேம்படுத்துவதுடன் நவீன சிக்னல் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது. பிரதான வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகளும் முடிக்கப்பட்டு உள்ளன.
 

அடுத்த ஆண்டிற்கான புதிய கால அட்டவணை, ஜன., 1 முதல் அமலாகும். சென்னை - கோவை, சென்னை - மதுரை - கன்னியாகுமரி உட்பட பல்வேறு வழித்தடங்களில், தற்போதுள்ளதை விட 30 முதல் 40 நிமிடங்கள் பயண நேரம் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.