×

வாட்ஸ் அப்பில் புது மோசடி... 'நோ' சொன்னால் கூட பணம் போய்விடும்- சைபர் போலீஸ் எச்சரிக்கை

 

தற்போதைய காலகட்டத்தில் ஆபத்தான டிஜிட்டல் மோசடிகள் நாளுக்கு நாள் புதிது புதிதாக அரங்கேறி வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி ஏமாற்றுபவர்கள் மக்களைப் பயமுறுத்தியும், அதிநவீன ஆப்கள் மூலமும் பணத்தைப் பறித்து வருகின்றனர். இந்த மோசடிகளில் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை நம்பி ஏமாந்து பணத்தை இழக்கின்றனர்.

இந்நிலையில் புதிதாக வாட்ஸ்-ஆப் பேங்கிங் மோசடி அரங்கேறி வருகிறது. அதாவது, வாட்ஸ்-ஆப் மூலம் ஆட்டோ எக்ஸிகியூஷன் ஃபைல் (Auto Execution File) தாக்குதல் ஆகும். நீங்கள் எந்த லிங்க்கையும் கிளிக் செய்யாமலோ அல்லது ஓடிபி-ஐ பகிராமலோ ஹேக் செய்வதற்கான வழியை மோசடி நபர்கள் கண்டுபிடித்துள்ளனர். எப்படி நடக்கிறது இந்த மோசடி? உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக ஒரு போலி செய்தி உங்களுக்கு வரும்.(உதாரணமாக ரூ. 50 ஆயிரம் எடுக்கப்பட்டது). இந்த தகவல் வந்த உடனேயே, இரண்டாவது செய்தி வரும். அதில், இந்த பரிவர்த்தனையை நீங்கள் செய்யவில்லை என்றால், தயவுசெய்து 'நோ' என்று பதிலளிக்கவும் என இருக்கும். அந்த தகவலில் மறைக்கப்பட்ட ஒரு ஆட்டோ எக்ஸிகியூஷன் ஃபைல் இருக்கும். நீங்கள் நோ என்று பதிலளித்தவுடன், அந்த ஃபைல் ஆக்டிவேட் ஆகி, ஹேக்கர்களுக்கு உங்கள் மொபைல் போன் மீதான முழு கட்டுப்பாட்டையும் கொடுத்துவிடும்.இதே போல் நடைபெற்ற சம்பவத்தில் ஒருவர் ரூ.1.70 லட்சத்தை இழந்துள்ளார். அவர் எந்த லிங்க்கையும் கிளிக் செய்யவில்லை, எந்த ஓடிபி-ஐயும் பகிரவில்லை. அவர் நோ என்று மட்டுமே பதிலளித்தார். 

எனவே, தெரியாத எண்ணில் இருந்து உங்கள் கணக்கில் பணம் எடுக்கப்பட்டதாக வாட்ஸ்-ஆப் செய்தி வந்தால், பதிலளிக்கக் கூடாது. உடனடியாக அதை அழித்துவிட வேண்டும். வந்த செய்தி உண்மையா அல்லது போலியா என்பதை சரிபார்க்க, உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ ஆப் மூலம் மட்டுமே உங்கள் கணக்கு அறிக்கை, இருப்பை சரிபார்க்கலாம். வங்கியின் அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகள் மற்றும் சரிபார்க்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை எண்களை மட்டுமே நம்ப வேண்டும். வங்கிகள் ஒருபோதும் வாட்ஸ்-ஆப் வழியாக இதுபோன்று எஸ், நோ என்று கேட்டு செய்திகளை அனுப்பாது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.