×

நாளை மறுநாள் முதல் புது ரூல்ஸ்..! ஆதார் கார்டில் வரும் மூன்று முக்கிய மாற்றம்..! 

 

ஆதார் கார்டில் பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் என அனைத்தையும் வீட்டிலிருந்தே மாற்றிக்கொள்ளலாம். இந்தப் புதிய மாற்றங்கள் ஆதார் சேவைகளை வேகமாகவும், எளிமையாகவும், பாதுகாப்பாகவும் மாற்றும் என்று கூறப்பட்டுள்ளது. முன்பெல்லாம் ஆதார் தகவல்களில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் ஆதார் சேவை மையத்திற்கு நேரில் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், இனி இந்த முழு வேலையையும் ஆன்லைனிலேயே செய்துவிடலாம்.

நீங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கும் பெயர் அல்லது முகவரி போன்ற விவரங்கள், உங்கள் பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது ரேஷன் கார்டு போன்ற அதிகாரப்பூர்வ அரசு ஆவணங்களுடன் தானாகவே சரிபார்க்கப்படும். இதனால், தகவல்கள் வேகமாக சரிசெய்யப்பட்டு பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். இந்த மாற்றங்களுக்கான கட்டணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. பெயர், முகவரி அல்லது மொபைல் எண்ணை மாற்றுவதற்கு ரூ. 75 கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல, கைரேகை, கருவிழி ஸ்கேன் அல்லது புகைப்படத்தை மாற்றுவதற்கு ரூ. 125 கட்டணம் வசூல் செய்யப்படும்.

5 முதல் 7 வயது மற்றும் 15 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் தகவல்களை இலவசமாக புதுப்பிக்கலாம். 2026ஆம் ஆண்டின் ஜூன் 14ஆம் தேதி வரை ஆன்லைனில் ஆவணங்களை இலவசமாக புதுப்பிக்கலாம். அதன் பிறகு ஆதார் சேவை மையத்தில் புதுப்பிக்க ரூ. 75 கட்டணம் செலுத்த வேண்டும். ஆதார் கார்டை மீண்டும் அச்சிட கோரிக்கை விடுத்தால் ரூ. 40 கட்டணம் வசூலிக்கப்படும். வீட்டிலிருந்தே ஆதார் சேவைகளைப் பெற முதல் நபருக்கு ரூ. 700 மற்றும் அதே முகவரியில் உள்ள ஒவ்வொரு கூடுதல் நபருக்கும் ரூ. 350 கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஆதார் கார்டில் வந்துள்ள மற்றொரு முக்கிய மாற்றம், ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அனைத்து பான் கார்டு வைத்திருப்பவர்களும் தங்கள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் 2026 ஜனவரி 1 முதல் உங்கள் பான் கார்டு செயலிழந்துவிடும். இதனால், நிதி மற்றும் வரி தொடர்பான எந்த வேலைகளுக்கும் அதை பயன்படுத்த முடியாது. புதிய பான் கார்டு விண்ணப்பிக்கும் போதும் ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டில் KYC செயல்முறையும் எளிமையாக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் KYC சரிபார்ப்பை இப்போது ஆதார் OTP சரிபார்ப்பு, வீடியோ KYC அல்லது நேரில் சென்று சரிபார்ப்பு மூலமாகவும் முடிக்கலாம். இதனால், இந்த செயல்முறை முற்றிலும் காகிதமில்லாமலும், நேரத்தை மிச்சப்படுத்தவும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் ஆதார் கார்டை நிர்வகிப்பதை மிகவும் எளிதாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தே தகவல்களை மாற்றிக்கொள்ளும் வசதி, பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும். மேலும், மேம்படுத்தப்பட்ட சரிபார்ப்பு முறைகள் தரவு பாதுகாப்பை உறுதி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.