அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’, ‘ஜன கண மன’ பாடப் புதிய விதிகள்: மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!
‘ஜன கண மன’ மற்றும் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ ஆகியவற்றை அரசு விழாக்களில் பாடும்போதோ அல்லது இசைக்கும்போதோ, அங்கீகரிக்கப்பட்ட வரிகள், உச்சரிப்பு மற்றும் பாடும் முறையை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜூலை 9-ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த உத்தரவு, அனைத்து மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில ஆளுநர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடலை முழு மரியாதையுடனும் துல்லியமான உச்சரிப்புடனும் பாட வேண்டும் என்றும், அதற்கான அதிகாரப்பூர்வ வரிகள் மற்றும் உச்சரிப்பு வழிகாட்டி உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரவின்படி, குடிமக்களுக்கு விருதுகள் வழங்கும் விழாக்கள், குடியரசுத் தலைவர் அரசு நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் மற்றும் புறப்படும் நேரங்களில், மேலும் அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சியில் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்பும் பின்பும் ‘வந்தே மாதரம்’ பாடப்பட வேண்டும்.
அதேபோல், மாநில ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் அரசு நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் மற்றும் புறப்படும் நேரங்களிலும், தேசியக் கொடி அணிவகுப்பில் கொண்டு வரப்படும் போதும் தேசியப் பாடல் இசைக்கப்பட வேண்டும்.
மாநில அரசுப் பாடல் இடம்பெறும் மாநிலங்களில், முதலில் ‘வந்தே மாதரம்’, அதன் பின்னர் ‘ஜன கண மன’ தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட வழிகாட்டுதலையும் மேற்கோள் காட்டியுள்ள அமைச்சகம், அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் சுமார் 3 நிமிடம் 10 விநாடிகள் நீளமுடைய ஆறு சரணங்கள் கொண்ட அதிகாரப்பூர்வ ‘வந்தே மாதரம்’ பதிப்பையே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தேசியப் பாடல் பாடப்படும் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
‘வந்தே மாதரம்’ 150-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தேசியப் பாடலை பொதுமக்கள் கூட்டாகப் பாடுவதற்கு அனுமதி இருப்பதாகவும், ஆனால் அது முழு மரியாதையுடனும் ஒழுங்குடனும் நடைபெற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், 1950 ஜனவரி 24-ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையால் ‘ஜன கண மன’ இந்தியாவின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதையும், விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பைக் கருத்தில் கொண்டு ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலுக்கு சமமான மரியாதையும் அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் நினைவூட்டியுள்ளது.