திருவண்ணாமலை கோவிலில் புதிய கட்டுப்பாடு- பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அபிசேகத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு இனி மருத்துவ பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கடந்த சில மாதங்களாகவே பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து விடுமுறை நாட்களில் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் கிரிவலம் மற்றும் அண்ணாமலையாரை தரிசித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அபிஷேகத்தில் கலந்து கொள்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு தினங்களில் கருவறை அபிஷேகத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அபிஷேகத்திற்கு ஒரு மணிநேரம் முன்னரே பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். அபிஷேகம் பார்ப்பவர்களுக்கு ORS கரைசல் வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கோவில் கருவறை குறுகலாக இருப்பதால் மூச்சு திணறலை தடுக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.