☰
×

ஒவ்வொரு பள்ளியிலும் புதிய பொறுப்பு! – காலை உணவுத் திட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

 

காலை உணவுத் திட்டத்தை கண்காணிக்க ஒவ்வொரு பள்ளியிலும், ஒருங்கிணைப்பு ஆசிரியரை நியமிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் லதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் லதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், 'தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக, அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரமான முறையில் உணவு சமைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்குவதை கண்காணிக்க ஒரு ஒருங்கிணைப்பு ஆசிரியர் நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உணவு சமைக்கும் சமையலறை தூய்மையாகவும், சமையல் பாத்திரங்கள் சுத்தமாகவும், பாதுகாப்பான குடிநீர் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் முறையாக பராமரிக்கப்படுவதையும் கண்காணிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் பாதுகாப்பான, சுத்தமான, சுகாதாரமான சூழலில் வழங்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் தலைமை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய அலுவலரால் உடனுக்குடன் சரி செய்யப்படுவதை ஒருங்கிணைப்பு ஆசிரியர் உறுதிசெய்ய வேண்டும்.

மேலும் காலை உணவுத் திட்டம் தொடர்பாக, சத்துணவு பணியாளர்களால் பராமரிக்கப்படும் கண்காணிப்புப் பதிவேடு, சரிபார்ப்புப் பட்டியலை கண்காணிக்க வேண்டும். குறைபாடுகளை உரிய நேரத்தில் தீர்ப்பதற்காக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பணிகளை தொடர்ந்து கண்காணித்திடவும், அதனை உறுதிப்படுத்தவும், ஒருங்கிணைப்பு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.