×

"அறநிலைய துறை நிதியில் கல்லூரிகள் தொடங்க கூடாது" - ஹைகோர்ட் உத்தரவு!

 

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை நிதியின் கீழ் 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு வெளியிட்டார். முதற்கட்டமாக சென்னை கொளத்தூர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஆகிய 4 இடங்களில் பி.காம், பிபிஏ,பிசிஏ, பிஎஸ்சி கணினி அறிவியல் ஆகிய 4 பாடப் பிரிவுகளுடன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டது.

கொளத்தூரில் இயங்கும் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், காவலர், தூய்மைப் பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சார்பில் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில் சம்மந்தப்பட்ட பணிகளுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மற்ற மதத்தினருக்கு தகுதி இல்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதேபோல அறநிலையத் துறை நிதியைக் கொண்டு கல்லூரிகள் தொடங்குவதை எதிர்த்து மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், இந்து சமய அறநிலைய துறை சார்பாக புதிதாக கல்லூரிகள் தொடங்க கூடாது என உத்தரவிட்டுள்ளது. அறங்காவலர் இல்லாமலும் நீதிமன்ற அனுமதி இல்லாமலும் கூடுதல் கல்லூரிகள் தொடங்க கூடாது எனவும் தற்போது தொடங்கியுள்ள கல்லூரிகளின் செயல்பாடு இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.