நெட்டிசன்கள் கலாய்! சுற்றுச்சூழல் துறையா? சுற்றுலா துறையா? பிரஸ்மீட்டில் குழப்பிய த.வெ.க இளம் அமைச்சர்..!
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக பார்க்கப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) புதிய அமைச்சரவையில், பல இளம் முகங்களுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அனுபவம் வாய்ந்த பழைய அரசியல் தலைவர்களுக்கு மத்தியில், துடிப்பான இந்த இளம் அமைச்சர்கள் தங்களது துறையின் கீழ் வரும் மக்கள் நலத்திட்டங்களை போர்க்கால அடிப்படையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்று ஒட்டுமொத்தத் தமிழகமும் பெரிதும் எதிர்பார்த்தது.
ஆனால், ஆட்சி பொறுப்பேற்ற சில வாரங்களிலேயே ஒரு சில இளம் அமைச்சர்களின் முதிர்ச்சியற்ற பேச்சுகளும், செயல்பாடுகளும் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளன.
தற்போது த.வெ.க-வை சேர்ந்த இளம் அமைச்சர் ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பில் செய்த குளறுபடி ஒன்று, சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.நேற்று நடைபெற்ற ஒரு முக்கியச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அந்த இளம் அமைச்சர், பதற்றத்திலோ அல்லது கவனக்குறைவாலோ தான் தற்பொழுது எந்த துறைக்கு அமைச்சராக பொறுப்பு வகிக்கிறோம் என்பதையே முற்றிலும் மாற்றிப் பேசினார்.
பொதுவாக 'சுற்றுச்சூழல் துறை' மற்றும் 'சுற்றுலாத்துறை' ஆகிய 2 வார்த்தைகளும் உச்சரிப்பில் சற்றே நெருக்கமாக இருப்பவை. ஆனால், ஒரு துறையின் செயல்பாட்டிற்கும் மற்றொரு துறையின் செயல்பாட்டிற்கும் மலைக்கும் மடுவுக்குமான பெரிய வித்தியாசம் உண்டு. திருவாடானை சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று, விஜய்யின் அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்றவர் வி.கே.ராஜீவ். இவர் த.வெ.க அரசின் 'சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை' அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ராஜீவ், தனது துறையின் கீழ் வரும் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு குறித்து பேசுவதற்குப் பதிலாக, ஒட்டுமொத்தமாகத் தனது துறையையே 'சுற்றுலாத்துறை' என்று மாற்றி சொல்லத் தொடங்கினார். முதலில் ஏதோ நாத்தடுமாற்றம் காரணமாக ஒருமுறை அப்படி பேசுகிறார் என்றுதான் அங்கிருந்த செய்தியாளர்கள் நினைத்தனர். ஆனால், அடுத்தடுத்து அவர் அதே 'சுற்றுலாத்துறை' என்ற வார்த்தையையே தொடர்ந்து பயன்படுத்தியபோதுதான், அமைச்சரே தனது துறை குறித்து முழுமையாகக் குழம்பிப் போய்விட்டார் என்பது அங்கிருந்தவர்களுக்கும் பொதுமக்களுக்கும் புரிந்தது.
பின்னர், உங்கள் துறை வேறு என்று அருகில் இருந்தவர்கள் எடுத்துரைத்தவுடன், அவர் சுதாரித்துக்கொண்டார். உடனடியாக மீண்டும் ரெக்கார்ட் செய்யுமாறு அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த வீடியோ காட்சி தற்போது எக்ஸ் (X) தளம் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், "மந்திரிக்குத் தன் பதவியே மறந்து போச்சா?" என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.