பேச்சுவார்த்தை தோல்வி; தொடரும் செவிலியர்கள் போராட்டம்..!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் நேற்று சென்னை சிவானந்தா சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்துக் கொண்டனர்.
போராட்டத்தின் போது, திமுகவின் தேர்தல் வாக்குறுதியின் படி, அனைத்து செவிலியர்களையும் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் என கோஷமிட்டனர்.
- மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு மீதான மேல் முறையீட்டை கைவிட்டு செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
- செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும்.
- கரோனா காலகட்டத்தில் பணி செய்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்.
- பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்த செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.
- செவிலியர்களுக்கு 7,14,20 மற்றும் 25 ஆண்டுகளில் பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்திட வேண்டும்.
- அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியர் கல்லூரிகள் உருவாக்கிட வேண்டும்.
- எம்.ஆர்.பி தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.
- கருவூலம் மூலம் ஊதியம் பெறும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ரூ. 18,000 ஊதியம் நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.
- ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தரத் செவிலியர் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இவர்களின் கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து செவிலியர்கள் போராட்டத்தை அங்கேயே தொடர்வது என முடிவு செய்தனர்.
இந்நிலையில், இரவு சுமார் 7 மணி அளவில் காவல் துறையினர், அவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி நேரம் முடிந்து விட்டதால் கலைந்து செல்லும்படி கூறினர். கலைந்து செல்ல மறுத்த செவிலியர்களை பேருந்துகளில் ஏற்றி கிளாம்பாக்கத்தில் இறக்கி விடுவதற்கு அழைத்துச் சென்றனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்பட்ட செவிலியர்கள் தங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை போராடுவோம் என அங்கும் தங்களின் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராட்டம் நடத்திய 730 செவிலியர்களை கைது செய்த காவல் துறையினர், ஊரப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து சென்னை போராட்டத்தில் பங்கு பெற இயலாத செவிலியர்கள், அந்தந்த மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும், மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுடன், தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் மாநில தலைவர் சசிகலா, மாநில பொதுச்செயலாளர் சுபின் மற்றும் மாநில பொருளாளர் ஹேமச்சந்திரன் உட்பட 5 மாநில நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களின் காேரிக்கை எதுவும் ஏற்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து செவிலியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.