இன்று நீட் தேர்வு! நீட் தேர்வுக்கு கிளம்பும் முன் இதை ஒருமுறை செக் பண்ணிக்கோங்க..!
May 3, 2026, 05:30 IST
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று மே 3ம் தேதி நடக்கிறது. விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த தேர்வுக்கான விரிவான வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளது.அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:
- தேர்வானது மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை என்பதால் முறையான சோதனை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்காக தேர்வு மையத்திற்கு விண்ணப்பித்தவர்கள் முன்கூட்டியே வருவது அவசியம்.
- தேர்வர்கள் எளிமையான ஆடைகளையே அணிந்து வர வேண்டும்.
- காலணிகளை பொறுத்தவரை ஷூக்கள் அணிந்து வரக்கூடாது. (சாதாரண காலணிகள், குறைந்த உயரம் கொண்ட ஹீல்ஸ் கொண்டவற்றை பயன்படுத்தலாம்)
- மதம், கலாசார ரீதியான ஆபரணங்கள், ஆடைகளை அணிவோர், கூடுதல் சோதனைக்காக குறித்த நேரத்திற்கு முன்னதாகவே தேர்வுக் கூடத்திற்கு வந்துவிட வேண்டும்.
- சோதனையின் போது ஏதேனும் சந்தேகத்துக்கு உரிய மின்னணு சாதனங்கள் கண்டறியப்பட்டால் அவற்றை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.
- குளிர் அதிகம் உள்ள இடங்களில் தேவைப்பட்டால் கம்பளியால் தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கு அனுமதி தரப்படும். ஆனால், தேர்வர்கள் இதுபற்றி முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
- பென்சில், பாக்ஸ், ஜியோமெட்ரி பாக்ஸ், கைப்பைகள், பர்ஸ், காகிதங்கள் என எந்தவொரு எழுது பொருட்களையும் எடுத்துச் செல்லக்கூடாது.
- செல்போன், ஹியர்போன், கால்குலேட்டர், கேமரா, எலக்ட்ரானிக் கடிகாரங்கள், உலோக பொருட்களுக்கு அனுமதி கிடையாது.
- நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தேர்வர்கள், மட்டும் முன் அனுமதியுடன் மாத்திரைகள், ஆப்பிள், வாழைப்பழம், குடிநீர் பாட்டில் எடுத்துச் செல்லலாம்.
- தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் பாஸ்போர்ட் அளவு போட்டோ ஒட்டி தேர்வு மையத்திற்கு எடுத்து வர வேண்டும்.
- அசல் அடையாளச்சான்று, மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் (தேவைப்பட்டால்) உடன் வைத்திருக்க வேண்டும்.
- கூகுள் மேப்பில் சில இடங்களில் தேர்வுக் கூடங்களை தவறாக காண்பிப்பதாக தெரிகிறது.
- எனவே நீட் தேர்வர்கள் தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடங்களை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் இடம்பெற்றிருக்கும் முகவரியை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுதல் அவசியம். அங்கு செல்லும் வகையில் உங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும்.
- முற்பகல் 11 மணி முதல் மதியம் 01:30 மணிக்குள் தேர்வுக் கூடத்திற்கு மாணவர்கள் வந்துவிட வேண்டும். 01:30 மணிக்கு பின்னர் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது.
- போக்குவரத்து நெரிசல், மழை அல்லது வானிலைகளால் ஏற்படும் தாமதங்கள் நிலவினால் அதற்கான பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.உரிய நேரத்தில் பயணத்தை திட்டமிட்டு, சரியான நேரத்தில் தேர்வுக்கூடத்திற்கு வந்து சேருவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.