×

நைட் லாக்டவுனில் விதிமீறல்... சுமார் ரூ.11 லட்சம் ஃபைன் வசூல் - சென்னை மாநகர போலீஸ் அதிரடி!

 

கொரோனா 3ஆம் அலையில் இந்தியாவில் 8 மாநிலங்கள் மட்டுமே கவலைக்குரிய நிலைமையில் உள்ளன. அதில் தமிழ்நாடும் ஒன்று. அந்தளவிற்கு தமிழ்நாட்டை  கொரோனா ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அந்த வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமையன்று முழு நேர ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு சுமார் 10 ஆயிரம் காவல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் எடுத்து நடவடிக்கையின்படி கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியதாக நேற்று மட்டும் 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 307 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல மாஸ்க் அணியாதது தொடர்பாக 5,469 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.10 லட்சத்து 93 ஆயிரத்து 800 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

தனிமனித விலகல் கடைப்பிடிக்காதது தொடர்பாக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.13 ஆயிரத்து 500 அபராதமும் வசூலிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் சென்னை பெருநகர காவல் குழுவினர் நாளை காலை 5 மணி வரை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், பொதுமக்கள் மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகர காவல் துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.