×

அடுத்த சர்ச்சை ட்வீட்... வசமாக சிக்கிய சித்தார்த் - டெல்லியிலிருந்து தமிழக டிஜிபிக்கு பறந்த கடிதம்!

 

நடிகர் சித்தார்த்தின் ட்வீட்கள் எப்போதுமே கவனம் பெறும். மத்திய அரசை அவர் விமர்சிக்கும் ட்வீட்களை சாதாரண நெட்டிசன்கள் கொண்டாடுவார்கள். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் போட்டு கிழித்தெடுப்பார்கள். ஆனால் தற்போது அனைத்து தரப்பினரையும் எரிச்சலூட்டும் வகையில் ட்வீட் செய்திருக்கிறார். இதனால் பெரும் சிக்கலிலும் மாட்டிவிட்டார். விஷயம் புகார் வரை சென்றுவிட்டது. ஆம் தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளது. ஏற்கெனவே மகாராஷ்டிரா டிஜிபி அலுவலகத்துக்கும் கடிதம் எழுதியிருந்தது.

அப்படி என்ன ட்வீட் செய்தார் சித்தார்த். அதை தெரிந்துகொள்ளும் முன் பஞ்சாப் பிரதமர் மோடி நடந்த விவகாரம் தெரிந்திருக்க வேண்டும். பஞ்சாப் எல்லைக்குள் நுழையும் முன்பே பிரதமரின் கார் செல்லும் மூன்று வழிகளை விவசாய அமைப்புகள் முற்றுகையிட்டன. இதனால் பாதுகாப்பு குறைபாடு எனக்கூறி அவரின் கார் டெல்லி திரும்பியது. பஞ்சாப் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. இதனால் காங்கிரஸ், பாஜக இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்தச் சமயம் தான் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஒரு ட்வீட் செய்தார். 

பிரதமருக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு நாடு பாதுகாப்பாக இருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது என குறிப்பிட்டிருந்தார். பாஜகவுக்கு ஆதரவாக அந்த ட்வீட் இருந்ததால், அதனை விமர்சிக்கும் வண்ணம் Shuttle Cock-ஐ (பேட்மிண்டன் பந்து) Subtle Cock- என மாற்றி என ட்வீட் செய்தார் சித்தார். அதாவது Subtle என்றால் ஒரு விஷயத்தை நுணுக்கமாக சொல்வது. நுட்பமாக பாஜகவுக்கு சாய்னா ஆதரவு தெரிவிக்கிறார் என்பதே சித்தார்த் ட்வீட்டின் சாராம்சம். ஆனால் அதிலுள்ள Cock என்ற வார்த்தை தான் சர்ச்சைகளுக்கு வித்திட்டது. இரட்டை அர்த்தமாக பொருள் கொள்ளப்பட்டது.

இதனால் சித்தார்த்துக்கு எதிராக விளையாட்டு வீரர்கள், பாஜக ஆதரவாளர்கள், நெட்டிசன்கள் என பலரும் கடுமையாக விமர்சனத்தைப் பதிவுசெய்தனர். இதற்குப் பின்னர் விளக்கமளித்த சித்தார்த், Cock and Bull என்ற Idiom-யை தான் உதாரணம் காட்டினேன். அதில் சாய்னாவை இழிவுப்படுத்தும் நோக்கில் கூறப்பட்டது அல்ல. ட்வீட்டை தவறாக சித்தரிக்காதீர்கள் என கூறினார். Cock and Bull என்றால் ஏமாற்றும் நோக்கத்தில் திரிக்கப்படும் கதை. அதாவது பிரதமருக்கு பாதுகாப்பு இல்லை என்ற ஏமாற்று கதையை சாய்னா உருவாக்கியதாக சித்தார்த் சொல்லியிருக்கிறார். 

ஆனால் அதை ஏற்க மறுத்த அனைவரும், இம்மாதிரி இரட்டை அர்த்தம் கொண்ட சொல்லை பிரயோகித்திருக்க கூடாது என்கின்றனர். அவரது கருத்து பரவலான எதிர்வினையை தூண்டிய நிலையில், தேசிய மகளிர் ஆணையம் இந்த விஷயத்தில் விசாரணை நடத்தி சித்தார்த் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர்களுக்கு(டிஜிபிக்களுக்கு) கடிதம் எழுதியிருக்கிறது. இச்சூழலில் மேலும் ஒரு ட்வீட்டால் சிக்கியிருக்கிறார் சித்தார்த். 

பிரதமர் மோடி பாதுகாப்பு குளறுபடி குறித்து Times Now Navbharat என்ற சானல் தொகுப்பாளினி ஒருவர் பேசியிருக்கிறார். அதனை ரிட்வீட் செய்துள்ள சித்தார்த், "இந்தப் பெண் தான் இல்லாத ஒன்றை ஊதி பெரிதாக்கப் போகிறவர் (Toolkit). இவர் நிச்சயமாக பெரிதாக குழப்பத்தை ஏற்படுத்துவார்” என குறிப்பிட்டிருந்தார். அதாவது அந்த செய்தி தொகுப்பாளினி மத்திய அரசின் கைப்பாவை. மத்திய அரசின் தூண்டுதலில் பேரில் விஷயத்தை பெரிதாக்குகிறார் என குறிப்பிட்டிருந்தார். இது அவரை இழிவுப்படுத்துவதால் நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.