ராகுல் காந்திக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கீதம் இசைக்கப்படும் தருணத்தில் எழுந்து நின்று, எவ்வித அசைவுமின்றி நேராக நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்பது ஒரு நாட்டின் குடிமகனாகப் பள்ளிச் சிறு குழந்தையும் அறிந்திருக்க வேண்டிய அடிப்படை ஒழுக்கம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், தேசிய கீதம் ஒலித்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு உரிய மரியாதை தராமல், செல்ஃபி எடுப்பதிலும் சக நபர்களுடன் கைகுலுக்கிக் கொள்வதிலும் ராகுல் காந்தி மும்முரமாக ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இத்தகைய அலட்சியப் போக்கு ராகுல் காந்திக்கு இந்த மண்ணின் மாண்பும் இறையாண்மையும் துளியும் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது எனச் சாடியுள்ளார். மேலும், இது ஏதோ எதிர்பாராமல் நடந்த தனிமனிதத் தவறாகப் பார்க்க முடியாது என்றும், பாரதத்தின் புனிதமான அடையாளங்களைச் சிறுமைப்படுத்துவதும் அவமதிப்பதும் காங்கிரஸ் கட்சியின் மரபணுவிலேயே ஊறிய ஒன்றாக மாறிவிட்டது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாட்டிற்காகத் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களையும், நாட்டின் இறையாண்மையையும் எள்ளி நகையாடும் இத்தகைய அவமதிப்புச் செயல்களை இந்திய மக்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.