×

இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம்..!!ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர்கள் இன்று வேலைநிறுத்தம்..!!

 

கால் டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து மகாராஷ்டிரா காம்நகர் சபா (தொழிற்சங்கம்) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாங்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களின் முக்கிய கோரிக்கை, சட்டவிரோத பைக் டாக்சிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்பது தான்.
பைக் டாக்சிகளை யார் வேண்டுமானாலும் பதிவு செய்து ஓட்டும் நிலைமை உள்ளது. இதனால் குற்றச்செயல்களும், விபத்துகளும் அதிகரித்துள்ளன. மேலும், பைக் டாக்சியில் சென்று விபத்தில் சிக்கினால் இன்சூரன்ஸும் கிடைக்காது. எனவே, பைக் டாக்சிகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.
அதே போல், ஓபன் பெர்மிட் முறையில் ஏராளமான ஆட்டோக்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதனால் ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகரித்து, எங்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, இந்த ஓபன் பெர்மிட் முறையை நீக்க வேண்டும்.
ஓலா, ரேபிடோ, உபெர் கால் டாக்சி, ஆட்டோக்களில் எமர்ஜென்சி பட்டன்களை கட்டாயமாக பொருத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பல டாக்சிகளில் அவை பொருத்தப்பட்டன. ஆனால், இப்போது அங்கீகரிக்கப்பட்ட 140 நிறுவனங்களிடம் இருந்து தான் இந்த கருவியை வாங்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்கனவே பொருத்திய எமர்ஜென்சி பட்டன் கருவிகளை அப்புறப்படுத்தி விட்டு, புதிய கருவிகளை பொருத்தும் நிலை ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட ஒரு ஓட்டுநருக்கு தலா ரூ.12,000 வரையில் செலவாகிறது. எனவே, இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும்.
அதேபோல, ஓலா, உபெர், ரேபிடோ ஆகிய ஆப்களே தன்னிச்சையாக பயணக் கட்டணங்களை நிர்ணயித்து வருகின்றன. இது, பல நேரங்களில் மிகவும் குறைவாக இருப்பதால் ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஓட்டுநர்களுடன் கலந்தாலோசித்து, குறைந்தபட்ச பயணக் கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஓட்டுநர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.