×

சிறந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருது... தமிழ்நாட்டிலிருந்து 6 பேர் தேர்வு!

 

ஐநா சபையின் கூற்றுப்படு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் டிசம்பர் 3ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தத் தினத்தில் மாற்றுத்திறனாளிகளைச் சிறப்பிக்கும் வண்ணம், அவர்களில் சிறந்த நபர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவையாற்றியவர்கள் ஆகியோருக்கு மாநில அளவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதேபோல மத்திய அரசு தேசிய விருது வழங்கி கௌரவிக்கிறது. 

அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றத்திற்கான தேசிய விருதிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  மாற்றுத்திறனாளிகளை முன்னேற்றும் வகையில் ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இதனைக் கருத்தில்கொண்டு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் மிகச்சிறந்த மாநிலம் என்ற விருதை தமிழ்நாடு தட்டிச்செல்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு சேவைகளை வழங்குவதில் மிகச்சிறந்த மாவட்டமாக தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சுயதொழில் மேற்கொள்வதற்காக சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த வேங்கட கிருஷ்ணன் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஏழுமலை, காஞ்சிபுரம் மாவட்டம் கானத்தூர் ரெட்டிகுப்பத்தைச் சேர்ந்த தினேஷ், திருச்சியைச் சேர்ந்த மானக்ஷா தண்டபாணி ஆகியோர் தேசிய விருதைப் பெறுகின்றனர். இதில் வேங்கட கிருஷ்ணன், ஏழுமலை பார்வை திறன் குறைபாடு உடையவர்கள். தினேஷ் அறிவுசார் குறைபாடு கொண்டவர். மானக்‌ஷா பல்வகை குறைபாடு உடையவர். இவர்கள் தவிர்த்து ரோல் மாடலாக திகழும் மந்தவெளியைச் சேர்ந்த ஜோதி, நாமக்கல் மாவட்டம் பேட்டப்பாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன் ஆகியோரும் விருது பெறுகிறார்கள். இவர்களுக்கு டிசம்பர் 3ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.