"ஈபிஎஸ் திமுக தயவில் முதல்வராக முயன்றார்"- நத்தம் விஸ்வநாதன்
மு.க.ஸ்டாலின் உடன் எடப்பாடி பழனிச்சாமி கூடிக் குழாவுகிறார். புரட்சி தலைவி ஜெயலலிதா மட்டும் இப்பொழுது உயிரோடு இருந்தார் என்றால் எடப்பாடி பழனிச்சாமி நிரந்தரமாக அதிமுக கட்சியில் இருந்து நீக்கி இருப்பார் என முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய நத்தம் விஸ்வநாதன், "அனைவரையும் அரவணைக்க வேண்டும் என கூறியவர்களை நீக்கியவர்தான் பழனிசாமி. அவர் தனது அணுகுமுறையை மாற்றாவிடில் அதிமுகவை காப்பாற்ற முடியாது. பழனிசாமி தலைமையில் 11 தோல்விகளை சந்தித்த அதிமுக, நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது. அதிமுகவில் அடுத்தடுத்து நிர்வாகிகளை நீக்கிய பழனிசாமி, ஒருநாள் அவரையே நீக்குவார் போல! அதிமுகவின் கலாசாரத்துக்கு எதிராக மு.க.ஸ்டாலினுடன் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். ஜெயலலிதா இருந்திருந்தால் அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கியிருப்பார். ஸ்டாலினுடன் சிரித்துப் பேசி புகைப்படம் எடுத்த விவகாரத்தில், எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக கலாச்சாரத்திற்கு எதிராகச் செயல்படுகிறார் எடப்பாடி.
ஜெயலலிதா இருக்கும்போது திருமண நிகழ்விலும் கூட தி.மு.கவினரை கண்டால் ஓடி ஒளிந்து விடுவோம். அம்மா இருந்திருந்தால் இந்த தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு வருமா..? புதுச்சேரி ரிசார்ட்-ல் வைத்து திமுக ஆதரவில் நாம் ஆட்சி அமைக்கப் போகிறோம், ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் உதவுவதாக சொல்லிவிட்டார்கள் என்று சொன்னார் எடப்பாடி பழனிசாமி. திமுக தயவில் முதலமைச்சராக முயன்றார் எடப்பாடி பழனிசாமி. முதலமைச்சர் விஜய்க்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் யாரும் ஒத்துழைப்பு கொடுக்க மாட்றாங்க" எனக் குற்றம்சாட்டினார்.