×

அண்ணாமலை அரைவேக்காட்டு அரசியல்வாதி- நாராயணசாமி

 

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவாதாக பொய் தகவல்களை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு தமிழகத்தில் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, “மத்திய அரசு ஊழல் நிறைந்த அரசாகி விட்டது.பாஜக ஆளும் மாநிலங்களில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. தமிழகம்-புதுச்சேரியில் பாஜக வதந்தி பரப்பும் கட்சியாக உள்ளது. சமூக வலைதளத்தில் உண்மைக்குபுறமான தகவல்களை வெளியிட்டு வருகிறது. வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க பொய் பிரசாரம் செய்தது. ஆனால் தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளார்.

கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தனி ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை தவறான செய்தியை பரப்பி தமிழத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அண்ணாமலை அரைவேக்காட்டு அரசியல்வாதி. பீகார் முதல்வரை தமிழக முதல்வர் தொடர்பு கொண்டு தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறியுள்ளார்.

பாஜக பொய் புரட்டால் கலவரத்தை தூண்டும் கட்சி. பொய்யை மூலதனமாக கொண்டு செயல்படும் பாஜகவிற்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள். தலை கீழாக நின்றாலும் பாஜக ஜம்மம்  பலிகாது. நீதிமன்றங்கள் அறிவுறுத்தியும், ஆளுநர்களும் துணைநிலை ஆளுநர்களும் திருந்தவில்லை. இவர்கள் குறை கேட்பதால் என்ன பயன்? என்ன செய்ய முடியும்? முதல்வர் ரங்கசாமிக்கு  நாற்காலியை பற்றி தான் கவலை. அதிகார எல்லைக்குள்தான் ஆளுநர்கள் செயல்பட வேண்டும். அதனை மீற கூடாது.

என்.ஆர்.காங்-பாஜக இணைந்து செயல்படுகிறோம் என கூறிய மறுநாளே புதுச்சேரியில் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் என கூறுகிறார். இந்த கூட்டணி தொடருமா..? என்.ஆர்.காங் எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்குமா..? என்ற பேச்சு மக்களிடம் இருக்கிறது. ஆட்சி ஜீபும்பா குகை யில் உள்ளது. எல்லாம் மர்மமாக இருக்கிறது. கலால் துறை லஞ்ச துறையாக மாறி விட்டது. இதில் முதல்வருக்கும் அதிகாரிகளுக்கும் பங்கு. இது தான் புதுச்சேரியின் ஜனநாயகம். மக்களை பற்றி கவலைபடாத அரசால் புதுச்சேரி அதளபாதாளத்திற்கு செல்கிறது” என்றார்.