×

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி தான் முதல் குற்றவாளி - நாராயணசாமி

 

தங்களது கோரிக்கையை ஏற்று நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், தேவைப்படும் பட்சத்தில் அந்த மனுவில் காங்கிரஸ் கட்சியும் தன்னை இணைத்துக் கொள்ளும் என்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.


மறைந்த முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்த காங்கிரஸார், இதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்கள். இதில் காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியலிங்கம் எம்.பி, உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திரளாக கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் 30 ஆண்டு காலம் சிறையில் இருந்தார்கள் என்பதற்காக அவர்கள் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்புடையது அல்ல. சமூக நீதிக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானது.  இந்த விடுதலையை எதிர்த்து எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி எங்களது கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.இதற்கு மத்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் இலங்கையை சேர்ந்தவர்கள், தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி இருந்தாலும் இலங்கையை சேர்ந்தவர்களை விடுதலை செய்ய சொல்ல இவர்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. தேவைப்படும் பட்சத்தில் மறு சீராய்வு மனுவில் காங்கிரஸ் கட்சியும் தங்களை இணைத்துக் கொள்ளும். ஒரு நாட்டின் பிரதமரை கொலை செய்தவர்கள் விடுதலையானதை சில அரசியல் கட்சிகள் கொண்டாடுகிறார்கள். இது எங்களுக்கு வருத்தத்தை  ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு 40 ஆண்டு காலம் எல்லாம் சிறையில் இருக்கிறார்கள். ஆனால் 30 ஆண்டு காலம் இவர்கள் இருந்தார்கள் என்பதற்காக விடுதலை செய்வது நீதி என்று செய்த நீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி தான் முதல் குற்றவாளி என்று அப்போது பணியில் இருந்த போலீஸ் அதிகாரி அனுசுயா சொல்லி இருக்கிறார்” எனக் கூறினார்.