×

தகுதியில்லாத ஒரு நபரை நிதியமைச்சராக நியமித்ததற்கு முதல்வர் வருத்தம் தெரிவிப்பாரா? 

 

தகுதியில்லாத ஒரு நபரை நிதியமைச்சராக நியமித்ததற்கு முதல்வர் வருத்தம் தெரிவிப்பாரா? என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பு ஏற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மூன்றாம் முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விவகாரத்தில் இருந்த சிக்கலைத் தொடர்ந்து அமைச்சராக இருந்த நாசர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.  

அதேசமயம் உதயநிதி,  சபரீசன் குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ அமைச்சரவையை மாற்றி அமைக்க காரணமாக இருக்கும் என்று தகவல்கள் கூறப்பட்டன.  இந்த சூழலில் தொழில்துறை அமைச்சராக டிஆர்பி ராஜா புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை அளிக்கப்பட்டுள்ளது.  அவர் கவனித்து வந்த நிதி துறையை தற்போது தங்கம் தென்னரசு நிர்வகிப்பார் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   அத்துடன் பால்வளத்துறை மனோ தங்கராஜ் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வகித்து வந்த தகவல் தொழில்நுட்பத்துறை பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தரப்பட்டுள்ளது.



இந்நிலையில் தமிழக பாஜக துணை பொதுச்செயலாளர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், "பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தமிழக அரசின் நிதி மேலாண்மையை திறம்பட நிர்வகிக்க தவறி விட்டார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லையெனில், 30,000 கோடி விவகாரம் உண்மை தான் என்று மக்கள் உறுதியாக நம்புவார்கள். தகுதியில்லாத ஒரு நபரை நிதியமைச்சராக நியமித்ததற்கு முதல்வர் வருத்தம் தெரிவிப்பாரா? அல்லது தகுதியுள்ள ஒரு நபரின் வாக்குமூலத்தை தவறென்று சொல்வாரா? " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.