×

“பழம் நழுவவில்லை; பாலில் விழவில்லை. பாதாளத்தில் தள்ளிவிடப் பட்டிருக்கிறது”- நாஞ்சில் சம்பத்

 

திமுகவுடன் தேமுக இணைந்துள்ள நிலையில், பழம் நழுவவில்லை பாலில் விழவில்லை. பாதாளத்தில் தள்ளிவிடப்பட்டிருக்கிறது என தவெக நிர்வாகி நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தளத்தில், “பழம் நழுவவில்லை; பாலில் விழவில்லை. பாதாளத்தில் தள்ளிவிடப்பட்டிருக்கிறது! இவர்கள் ஏற்பாடு செய்து வருவது கூட்டணி அல்ல.. தங்களுக்குள் உள்குத்து விளையாடும் குஸ்தி அணி! அவர்களின் கூட்டணிக்கான குழு தன் வேலையைத் தொடங்கும் தினத்திற்கு முன்பே, தினந்தோறும் எதையாவது செய்து தன் கால் நடுக்கத்தைக் காட்டிக்கொடுக்கிறது பவளவிழாக் கட்சி. ஏற்கனவே அந்த பாழுங்கிணற்றுக்குள் இருப்பவர்கள் எல்லோருமே தங்கள் எண்ணிக்கை நிலையை எண்ணிக் கதறிக்கொண்டிருக்கிறார்கள். 'யார் இருப்பார், யார் தாவுவார்' எனத் தெரியாமல், 'யாராவது இருக்கீங்களா? பயமா இருக்குது!' என அலறி வருகிறார்கள்.

என்ன செய்வதெனத் தெரியாமல் அந்த ஓனர், மேற்கொண்டு இருப்பவர்கள் எல்லோரையும் வண்டியில் ஏற்றலாம் என முடிவு செய்துவிட்டார். இட ஒதுக்கீட்டைத் தாங்கள்தான் கண்டுபிடித்தோம் எனப் போலி வியாக்கியானம் பேசும் கூட்டம், கூட்டணி ஒதுக்கீட்டைக்கூடக் கையாள முடியாமல் தவிப்பதை நாடறியும்.'அவர் இருக்கிறார்; எனவே நீங்கள் குறைத்துக்கொள்ளுங்கள். இவர் இருக்கிறார்; எனவே நீங்கள் தள்ளி நில்லுங்கள்' எனச் சக கூட்டணிக் கட்சிகள் ஒருவரையொருவர் ஒடுக்கத்தான் இந்த ஓவர்லோட் அணி ஏற்பாடு! இதற்குப் பெயர்தான் சமூக நீதியா? அதிலும், மலரோடும் இலையோடும் கனியக் காத்திருந்த பழத்தைச் சூரியனிடம் சூடுபட அனுப்பியதே மலரின் தாய் அமைப்புதான் என்ற கசக்கும் உண்மையைச் சொல்லத்தான் வேண்டுமா? மொத்தத்தில் பழம் நழுவவில்லை; பாலில் விழவில்லை. பாதாளத்தில் தள்ளிவிடப் பட்டிருக்கிறது! அந்தோ பரிதாபம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.