கோடை வெயிலால் உற்பத்தி பாதிப்பு- முட்டை விலை அதிரடி உயர்வு
கோடை வெயில் காரணமாக முட்டை உற்பத்தி 15 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதால் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.4.80 ல் இருந்து 20 காசுகள் உயர்த்தி ரூ.5 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இன்று (13-4-2026) மாலை அறிவித்துள்ளது. இந்த விலை நாளை (14-4-2026) காலை முதல் அமலுக்கு வருகிறது. கடந்த 3 நாட்களில் 70 காசுகள் உயர்ந்துள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கோடை வெயில் தற்போதே கொளுத்தி வருகிறது.
கோடை வெயில் காரணமாக முட்டை உற்பத்தி 15 சதவீதம் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. முட்டையின் நுகர்வும் , விற்பனையும் அதிகரித்துள்ளது பிற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் பண்ணையாளர்கள். தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,100 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 7 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன.மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.