"தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது வரிசை... த்ரிஷாவுக்கு முதல் வரிசை?'' - நக்கீரன் கோபால் சாடல்
முதலமைச்சர் விஜய் பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்ததை ரீல்ஸ் எடுத்து போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாடு எதை நோக்கி செல்கிறது? என நக்கீரன் கோபால் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாள் விழாவில் உரையாற்றிய நக்கீரன் கோபால், “மே.10 ஆம் தேதி முதலமைச்சர் விஜய் பதவியேற்றது முதல் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. அவருக்கு பதவியேற்க யார் தேதி குறித்து கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. தேர்தல் முடிந்த பின்பும் அவர் ‘வெற்றி நிச்சயம்’ என்று பேசிக் கொண்டிருக்கிறார். அவர்தான் தற்போதைய முதல்வர் என்பதை யாராவது அவருக்கு சொல்லி புரியவையுங்கள். தேர்தல் முடிந்த பின்பும் Confident-ஆ இருங்க.. வெற்றி நிச்சயம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.
முதலமைச்சர் விஜய் பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்ததை ரீல்ஸ் எடுத்து போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாடு எதை நோக்கி செல்கிறது? ரீல்ஸில் தான் தவெகவினர் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சரவை அமைப்பதற்கு ‘ஜனநாயகன்’ தயாரிப்பாளர் விஷ்ணு ரெட்டியை முதல்வர் விஜய் எதற்கு அழைத்து சென்றார் என யாராவது கேட்டார்களா? 6 மாதங்கள் வரை நீங்கள் வேண்டுமானால் விட்டுப்பிடிக்கலாம், நான் விட்டுப்பிடிப்பது போல் இல்லை, என்னால் சும்மா இருக்க முடியாது. பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது வரிசை... த்ரிஷாவுக்கு முதல் வரிசை வழங்கப்பட்டுள்ளது” என விமர்சித்தார்.