அக்.4-ல் நெல்லையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் - நயினார் நாகேந்திரன் அதிரடி அறிவிப்பு!
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடடம் பேசியதாவது,
"இந்தியாவின் நகைச்சுவை மன்னன், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. தேர்தல் ஆணையத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து வைத்துள்ளார். ராகுல் காந்தி சொல்வதை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். மு.க.ஸ்டாலினை பெரிதும் மதிப்பவன் நான். அவரது தொகுதியிலும் பல வாக்குகள் நீக்கப்பட்டது. ஆனால் அதில் குறைபாடு உள்ளது என அவர் இதுவரை சொல்லவில்லை. தலைமைத் தேர்தல் ஆணையர், இரண்டு ஆணையாளர்கள் என மூவரும் சேர்ந்து, எங்களுக்குள் எந்த பாகுபாடும் இல்லை எனத் தீர்க்கமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையம் சொன்னது சரி என உச்சநீதிமன்றம் வரவேற்பு தெரிவித்து உள்ளது. ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை பிரச்சனை இது. இந்தியாவில் வாழும் தகுதியானவர்கள் வாக்காளர்களாக இருக்க வேண்டும். இந்தியர்களை தவிர வெளிநாட்டவர்கள் யாரும் வாக்களிக்க தகுதி இல்லாதவர்கள் எனத் நீதிமன்றம் தெரிவித்து அதற்காக எஸ்.ஐ.ஆர். திட்டம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆருக்கு முன்னால் 6 கோடியே 40 லட்சம் பேர் வாக்காளர்களாக இருந்த நிலையில், தற்போது 5 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் தற்போது உள்ளனர். 11 சதவீத வாக்காளர்கள் தமிழகத்தில் குறைந்துள்ளனர். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் எஸ்.ஐ.ஆர். நடைமுறைக்கு பின்னர் இரண்டு லட்சம் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இது பற்றி யாரும் குறை கூறவில்லை" என்றார்.
தமிழக அரசியல் விவகார் தொடர்பாக பேசிய அவர், "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல்படுத்த வேண்டாம், அதனை யாருக்கும் கொடுக்க வேண்டாம் என சொல்ல மாட்டோம். தேர்தலில் சொன்ன 2,500 ரூபாய் திட்டம் என்னாச்சு?. 2,500 ரூபாய் திட்டத்தை வீடு வீடாக முதலில் கொடுங்கள். மின்வெட்டு அதிகரித்து வருகிறது. அதனை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மின் கட்டணம் அதிகரித்து வருகிறது. அது இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தங்க மோதிரம் கொடுக்கும் திட்டத்திற்கு முன் இதனை எல்லாம் சரி செய்யுங்கள். ஊர் எங்கும் கஞ்சா, போதைப்பொருள் விற்பனை, கற்பழிப்பு, கொலைகள் என பல சம்பவங்கள் நடந்து வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் இந்த சம்பவங்களில் கைதாகி உள்ளனர். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக முதலமைச்சருக்கு ஒன்றுமே தெரியாமல் பேசுகிறார். உலகம் முழுவதும் பாஜக உள்ளது. பாஜக கொள்கை வேறு, திமுக கொள்கை வேறு. திமுக, பாஜக கொள்கை ஒன்றுக்கொன்று ஒத்துப் போகாது. இரண்டும் இணையாது.
காவல்துறை மானியக் கோரிக்கையில் ஒரு வார்த்தைகூட காவல்துறையினர் பற்றி முதலமைச்சர் பேசவில்லை. சட்டமன்றத்தில் காவல்துறைக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து முதலமைச்சர் பேசவே இல்லை. தமிழகத்துக்கான, மக்களுக்கான எந்தத் திட்டம் குறித்தும் முதல்வர் சட்டமன்றத்தில் பேசவில்லை. அதற்கு மாறாக மாமன், மச்சான் பிரச்சனையை மட்டுமே பேசி உள்ளனர்.
நேர்மையான ஆட்சி என்றால் டெண்டர் நேர்மையாக வழங்க வேண்டும். முதலமைச்சர் அலுவலகம் புதுப்பிக்கும் பணி கூட டெண்டர் முறையாக விடவில்லை. டாஸ்மாக் டெண்டர் விட்டதிலும் கூட ஊழல் உள்ளது. மின்வெட்டு மூலம் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக நெல்லையில் எனது தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் வரும் 4-ம் தேதி நடைபெறும்" எனத் தெரிவித்தார்.