×

சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்: நயினார் நாகேந்திரன் புகழாரம்..!!

 
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
புண்ணிய பூமியாம் பாரத பூமியில், வாழையடி வாழையாக எண்ணற்ற மகான்கள் தோன்றியுள்ளனர். இந்த வரிசையில் தோன்றியவர்தான் 'சுவாமி விவேகானந்தர்’. அந்நியருக்கு அடிமைப்பட்டும் தன்மானமிழந்தும் உறங்கிக் கிடந்த இந்தியாவை தட்டி எழுப்பி, வீறுகொண்டு எழச் செய்தவர் சுவாமி விவேகானந்தர்.
மகாகவி பாரதியார், சுவாமி விவேகானந்தரைப் பற்றி குறிப்பிடும்போது, 'விவேகானந்த பரமஹம்சமூர்த்தியே இந்திய விடுதலை பெறுவதற்கு அஸ்திவாரம் போட்டவர் என்பதை உலகம் அறியும்,’ என்றார்.
“நாம் அனைவரும் கடுமையாக உழைப்போமாக. உறங்குவதற்கு இது நேரமில்லை. எதிர்கால இந்தியா நம் உழைப்பைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது. புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்து விட்டாள். தனது அரியணையில் அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று, என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள். இந்தக் காட்சியைப் பட்டப்பகல் வெளிச்சத்தைப் போல் நான் தெளிவாகப் பார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்தப் பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப்படுத்துங்கள்” என முழங்கிய ‘தேசபக்த ஞானி’ விவேகானந்தரின் பிறந்தநாளில், அவரது வழி நடந்து அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்க உறுதி ஏற்போம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.