நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைப்பதற்காக பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலையை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக அதிமுகவுடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்பதற்காக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரனை நியமித்தனர்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் செயல்பட்டு வந்த நிலையில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்திருக்க கூடிய சூழலில் பாஜகவினர் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த முறை 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த நிலையில் தற்பொழுது ஒரு சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே சட்டமன்றத்திற்கு செல்லக்கூடிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜிக்கு மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் பதவியை நயினார் நாகேந்திரன் வழங்கினார்.இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பலரும் வாரிசு அரசியல் என விமர்சனம் எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் தொண்டர்கள் பலரும் நயினார் நாகேந்திரன் மீது அதிருப்தியில் இருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. தற்பொழுது ஒன்றிய அரசின் 12 ஆண்டுகள் முடிவடைகின்ற நிலையில் ஜூன் 1ம் தேதி நிறைவு பெறுகின்றது. மேலும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம், ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம், ஜூன் 5 முதல் 21 வரை பல்வேறு நிகழ்ச்சிகளும் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது. அதனை ஒருங்கிணைத்து சிறப்பான முறையில் நடத்துவதற்காக மாநில குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த மாநில குழுவிலும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜிக்கு உறுப்பினராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவும் கட்சியினர் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.