"உங்களுக்கு சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம்னு மக்கள் சொல்றாங்க"- நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி!
விருதுநகரில் பூத் கமிட்டியை ஆய்வு செய்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம், “உங்களுக்கு சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம் என மக்கள் சொல்றாங்க' என அக்கட்சி தொண்டரே தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக தயாராகிவருகின்றன. அந்த வகையில் பாஜக தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி அமைத்து வருகிறது. இந்நிலையில், விருதுநகரில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆய்வுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் விசிட் அடித்தார். விருதுநகர் ரோசல்பட்டி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே பூத் கமிட்டி ஆய்வுக்கு வந்த அவரிடம் பாஜக தொண்டர் ஒருவர், “நீங்கள் தேர்தலில் நில்லுங்கள், உங்களுக்கு சோறு கூட போடுறோம். ஆனால், ஓட்டுப் போட மாட்டோம் என எல்லாரும் சொல்றாங்க“ என நயினார் நாகேந்திரனிடம் திடீரென தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட பாஜக நிர்வாகிகள், அதை பிறகு பேசிக் கொள்ளலாம் எனக் கூறி சமாளித்து அவரை திருப்பி அனுப்பினர்.