செவிலியர்களுக்குச் செய்த துரோகத்திற்கு தவெக அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்- சீமான்
ஆட்சிக்கு வந்து முதல் நாளிலேயே பணி நிரந்தரம் செய்வோம் என்று உறுதியளித்து வாக்குகளைப் பெற்றுவிட்டு, அதனை நிறைவேற்றக்கோரினால் கைது செய்வதா? செவிலியர்களுக்குச் செய்த துரோகத்திற்கு தவெக அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னையில் போராடிய செவிலித் தங்கைகளை காவல்துறையைக் கொண்டு வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ள தவெக அரசின் அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறேன். நோயுற்ற மக்களை இரவும் பகலும் கண் விழித்து காக்கும் தாயினும் சிறந்த செவிலியர்களை, உரிமைக்காக வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது மிகுந்த வேதனைக்குரியது. செவிலியர் தங்கைகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய தவெக அரசு, சிறிதும் மனச்சான்றின்றி காவல்துறை ஏவி அடக்கி ஒடுக்கி கைது செய்வது வெட்கக்கேடானது! கடந்த ஆட்சியில் இதே வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காகச் செவிலியர்கள் போராடியபோது ஆதரவு தெரிவித்த தவெக, ஆட்சிக்கு வந்தால் முதல் நாளிலேயே பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதியும் அளித்தது. அன்று நியாயமாகத் தெரிந்த செவிலியர் கோரிக்கைகள், இன்று அதிகாரத்தில் அமர்ந்ததும் செல்லாததாகிவிட்டதா?
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு; ஆளுங்கட்சியானதும் இன்னொரு நிலைப்பாடு என்பதுதான் தவெகவின் சந்தர்ப்பவாத அரசியலா? கொரோனா காலத்தில் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மக்களை காத்த செவிலித்தங்கைகளை காயப்படுத்துவது நியாயம்தானா? அன்றைக்கு தேவதைகளாக தெரிந்தவர்கள் இன்றைக்கு தேவையில்லாதவர்கள் ஆகிவிட்டார்களா? அதிலும், பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி, தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட செவிலியர்களின் ஐந்து பிரதிநிதிகளைக் கைது செய்ய தவெக அரசு முயல்வது அதிர்ச்சியளிக்கிறது. தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்தவர்களைக் கைது செய்வது, இனி அரசின் வார்த்தையை மக்கள் நம்ப முடியாத நிலையை உருவாக்கும் கொடுஞ்செயல்! பேச்சுவார்த்தை என்ற பெயரில் போராட்டப் பிரதிநிதிகளைச் சிறைப்பிடிப்பது சனநாயக அரசுக்கு இழுக்காகும். வாக்குகளைப் பெறுவதற்கு ஆதரவு! வாக்குறுதியை நிறைவேற்றக் கேட்டால் கைது! இதுதான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் கூறிய மாற்று அரசியலா? இதுதான் தவெக அரசு பெண்களை காக்கும் முறையா? வீதியில் கதறும் செவிலித்தங்கைகளின் கண்ணீருக்கு முதல்வர் விஜய் அவர்கள் என்ன பதில் கூறிப்போகிறார்? செவிலியர்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, அவர்களையே காவல்துறையால் அடக்குவது அப்பட்டமான நம்பிக்கைத் துரோகம் இல்லையா? இதுபோன்ற துரோகங்களை அரசு செய்தால் அரசின் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? வருங்கால இளந்தலைமுறை பிள்ளைகள் இனி அரசின் வார்த்தையை நம்ப எப்படி மக்கள் தொண்டு செய்ய முன்வருவார்கள்?
அரசு மருத்துவனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் தர நிதி இருக்கும் அரசிடம், அந்த குழந்தைகளை நல்லபடியாக பிறப்பிக்கும் செவிலித்தாய்களுக்கு உரிமை வழங்க பணம் இல்லையா? மக்களின் உயிரைக் காக்கும் செவிலியர்களுக்குத் தங்களுடைய பணிக்கும் வாழ்வுக்கும் பாதுகாப்பு கேட்க உரிமை இல்லையா? அவர்களின் உழைப்பைப் பெறத் தெரிந்த அரசுக்கு, அந்த உழைப்பிற்குரிய ஊதியத்தையும், மரியாதையையும் வழங்கத் தெரியாதா? ஆகவே, தவெக அரசு இனியும் வெற்று வாய்மொழி உறுதிகளை வழங்கிக் காலம் கடத்தாமல், பணிநிரந்தரம், உரிய ஊதியம் உள்ளிட்ட செவிலியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும், போராடும் செவிலித்தங்கைகளின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை முழுமையாக திரும்பப்பெற வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.