“15 ஆண்டுகளாக கத்துகிறேன்... எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்”- சீமான்
மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் வாய்ப்பு கொடுத்து விட்டீர்கள். சீமானுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். நானும் 15 வருடங்களாக கத்துகிறேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
2026 தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின் உரையாற்றிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், “என் தம்பி விஜய் அறிவித்த இலவசங்களுக்கே மாதம் ஒரு லட்சம் கோடி தேவைப்படுகிறது. எங்கிருந்து எடுத்து கொடுப்பீர்கள். அண்ணன் சீர், மாமன் சீர் எல்லாவற்றையும் அரசுப் பணத்தில் தராமல் சொந்த பணத்தில் கொடுக்க வேண்டும். உண்மையான பிக்பாஸ் நான்தான் . எனது ஆட்சியில் குற்றவாளிகள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. பாலியல் வன்கொடுமை செய்தவனை 10 நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்கிறீர்களே, அதுபோல் இருக்க முடியாது. மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் வாய்ப்பு கொடுத்து விட்டீர்கள். சீமானுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். நானும் 15 வருடங்களாக கத்துகிறேன்
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தலைவர்களின் சிலை கூண்டுகளில் இருந்து எடுக்கப்படும், பஞ்சமி நிலங்கள் மீட்கப்படும். சாதியை பார்த்து பழக மாட்டோம். அந்த எண்ணமே வராத அளவிற்கு இந்த சமூகத்தை மாற்றுவோம். தமிழ்நாட்டில் நாம் தமிழர் ஆட்சி வந்த பிறகு பெண்கள் நடுராத்திரியில் கூட தனியாக செல்லலாம், ஒருவன் தொட மாட்டான். என் மாநாட்டில் பல லட்சம் பெண்கள் வந்தார்கள். ஒருவராவது பெண்ணை தொட்டான், சீண்டினான் என சொல்ல முடியுமா? 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை பயணத்தை வரும் மார்ச் 23ஆம் தேதியிலிருந்து மேற்கொள்கிறேன்” என்றார்.