"கொரோனா வார்டுக்கு சென்றதால் என் மனைவி ஒரு வாரம் பேசவில்லை": விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்..!
தி.மு.க தலைவர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இ.பி.எஸ் சசிகலா காலில் விழுந்த புகைப்படத்தை வைத்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், மு.க.ஸ்டாலின், மத்திய அரசுடன் இணைந்து இ.பி.எஸ் தமிழக மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று விமர்சித்து வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, உதயநிதி ஸ்டாலின், நள்ளிரவு 2 மணிக்கு நடிகையின் புகைப்படங்களை ரீபோஸ்ட் செய்த சம்பவத்தை எடுத்து சொல்லி வரும் இ.பி.எஸ் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்.
திருவண்ணாமலையைத் தொடர்ந்து, விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு, அவர் பேசியதாவது
இந்நிலையில் இன்று என்டிஏ என்ற பெயரில் அமைக்கப்பட்ட கூட்டணியானது, துரோகிகளால் தமிழகத்திற்கு புதிய துரோகம் செய்வதற்காக, அமைக்கப்பட்ட கூட்டணி அது. முதல் துரோகம் தான் நீட் தேர்வு. நீட்டுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை, மத்திய பாஜ திருப்பி அனுப்பியது. அதனை ஓராண்டுக்கு வெளியே சொல்லாமல் அதிமுக மறைத்து, மாணவர்களுக்கு துரோகம் செய்தார்கள்.
உதய் மின் திட்டத்திற்கு கையெழுத்து போட்டு, 3 விவசாய சட்டங்களுக்கு ஆதரவு அளித்து விவசாயிகளுக்கு துரோகம் செய்தார்கள். கீழடி ஆய்வுகளை குழிதோண்டி புதைக்க பார்த்து தமிழகத்திற்கு துரோகம் செய்ய நினைத்தார்கள். வக்பு திருத்த சட்டம், குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டு வந்து துரோகம் செய்தார்கள். மும்மொழிக்கொள்கையை திணித்தும், ஆதரித்தும் துரோகம் செய்றாங்க. 'நோ டெவலப்மென்ட் அலையன்ஸ்' தான் என்டிஏ.நான் தேர்தல் அறிக்கை வெளியிட்ட தினம் தான் நம் வெற்றிக்கு நிச்சயதார்த்த நாள். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை பட்டியலிடுவதைப் போல, இபிஎஸ்சினால் பட்டியலிட முடியுமா? அதனால் தான் பொய்களை வாந்தி எடுத்துக் கொண்டு இருக்கிறார். அம்மா பல்கலை திட்டங்களை தடுத்து விட்டோம் என்று பொய்களை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறார். 2021ல் தேர்தல் அறிவித்த நாளில் தான் அந்த பல்கலையை அறிவித்து விட்டு, வெறும் 10க்கு 4 அளவில் அறிவிப்பு பலகையை வைத்தார்கள். நாங்கள் தான் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அண்ணாமலை பல்கலையுடன் அதனை இணைத்து மாணவர்களை படிக்க வைத்தோம்.
சாதனை மட்டுமில்ல, உங்களின் ஒவ்வொரு பொய்க்கு என்னால் பதிலடி கொடுக்க முடியும். தோல்வி பயத்தில் தாறுமாறாக தரம் கெட்டு பேசி வருகிறார். திமுக ஆட்சியில் கொரோனா வந்திருந்தால், நான் இறந்திருப்பேன் என்று இபிஎஸ் இன்றைய பிரசாரத்தில் சொல்கிறார். மரணத்தை பார்த்து பயப்படுபவன் நானில்லை. நீங்க அரசியலுக்கு வருவதற்கு முன்பே மிசாவில் கைது செய்யப்பட்டு, சிறைக் கொடுமைகளை அனுபவித்தவன் தான். கொடுஞ்சிறைக்கே பயப்படாத நான், கொரோனாவுக்கா பயப்படுவேன். தகுந்த பாதுகாப்பு உடை அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்றவன் நான். எந்த அறிவிப்போ, தகவலோ இல்லாமல் கொரோனா வார்டுக்குள் சென்றேன். இதுவரை நான் யாரிடமும் சொல்லாததை இங்கு சொல்கிறேன். கொரோனா வார்டுக்குள் சென்றதால் என் மனைவி என்னிடம் ஒரு வாரம் பேசவே இல்லை. மக்களைக் காக்க எந்த அளவுக்கும் துணிச்சலாக செல்லக் கூடியவன். இபிஎஸ்சின் கீழ்த்தரமான பேச்சுக்களை எல்லாம் கேட்டு, என்னுடைய வருத்தம் எல்லாம் என்ன தெரியுமா?, ஈவெரா, அண்ணாதுரை, காமராஜர், எம்ஜிஆர் போன்ற பெருந்தலைவர்களுடன் நேரில் பழகக்கூடிய அனுபவம் கொண்ட நான், இன்று இவருக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியதை நினைத்து வருத்தப்படுகிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் ஆன பிறகு, இபிஎஸ் ஜெயித்ததே கிடையாது. திமுக தலைவராக பொறுப்பேற்ற பின், மக்கள் ஆதரவுடன் நான் தோற்றதே கிடையாது. பாஜ என்ற பேரழிவை தமிழகத்திற்குள் கொண்டு வர நினைக்கும் இபிஎஸ்க்கு, சரியான பதிலடியை மக்கள் கொடுக்க வேண்டும். 11வது தோல்வியை அவருக்கு வழங்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.