×

என் மகன் இறக்கவில்லை... மற்றவர்களுக்குள்ளே வாழ்கிறான்..! - சோகத்திலும் நெகிழ வைத்த பெற்றோர்!

 

திருப்பூரை சேர்ந்தவர் குணசீலன் (24). இவர் ஈரோடு  மாவட்டத்தில் வசித்து வருகிறார்.

இவர் கடந்த 15ம் தேதி காலை 10.45மணிக்கு உணவு உண்ணும்பொழுது புரையேறி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் கடந்த 21ம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அவரது பெற்றோர் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையம் & காவல்துறை  அனுமதி மற்றும் வழிகாட்டுதலுடன் அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், எலும்பு மற்றும் தோல்  ஆகியவை தானமாக பெறப்பட்டது. சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கும், கண்கள், எலும்பு, தோல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது."எங்கள் மகன் மறைந்தாலும், அவனது உறுப்புகள் மூலம் மற்றவர்களுக்குள் அவன் தொடர்ந்து வாழ்வான்" என அவர்கள் உருக்கமாகத் தெரிவித்தனர்.

கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்.

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி இது குறித்து கூறுகையில், "மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இன்னும் அதிகரிக்க வேண்டும். ஒருவர் மறைந்த பிறகும் அவரது உடல் உறுப்புகள் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்பதற்கு இந்த சம்பவமும், அந்தப் பெற்றோரின் துணிச்சலான முடிவுமே சிறந்த சான்று" எனக் கூறி அக்குடும்பத்திற்கு தனது நன்றியையும் இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.