×

"தமிழகத்தில் முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது"  - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!

 

தமிழகத்தில் 11வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தினம்தோறும் ஒரு லட்சம் தடுப்பூசி என்ற இலக்குடன் தொடங்கப்பட்ட இலக்கானது , செப்டம்பர் மாதத்திலிருந்து மெகா தடுப்பூசி முகாமாக உருவாக்கப்பட்டது. இந்த மாத இறுதிக்குள் 100% இலக்கை தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது . அந்த வகையில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றுவந்த தடுப்பூசி முகாம், அசைவம் சாப்பிடுபவர்கள் மற்றும் மது பிரியர்களுக்காக சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது.  இதைத்தொடர்ந்து  வாரத்தில் இரண்டு நாட்கள் தடுப்பூசி முகாமை அமைக்க தமிழக அரசு முடிவெடுத்தது.  அதன்படி வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு தினங்கள் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து,  முகாம்களை நடத்தி வருகிறது.
இதுவரை தமிழகத்தில் 10 மெகா தடுப்பூசிமுகாம் நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

இந்த சூழலில்  11வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெறுகிறது.  காலக்கெடு முடிந்து இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு இதில் முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த வாரம் 40 லட்சம் அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில்,  இந்த வாரம் 50 லட்சம் இலக்கை நிர்ணயித்து தடுப்பூசி செலுத்தும் பணிகளை சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையை பொருத்தவரை 200 வார்டுகளிலும் 1,600 மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.  இந்த தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 2 லட்சம் நபர்களுக்கு தடுப்பு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், பூங்காக்கள் என தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில் இதை பயன்படுத்தி மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது . 

இந்நிலையில் சென்னை வள்ளலார் நகரில் நடைபெற்று வரும் தடுப்பூசி மெகா முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் 1,600 பகுதிகளில் தடுப்பூசி முகாம். 2 லட்சம் பேர் இலக்கு. 1.1 கோடி தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.தமிழகத்தில் நேற்று வரை 76.23% பேர் முதல் தவணையும், 40.31% பேர் இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். தமிழகத்தில் முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது . எந்த இடமாக இருந்தாலும் 100% முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம், தடுப்பூசி மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் என்றார்.