போதைப் பொருள் குறித்து புகார் அளித்த மாணவன் படுகொலை- கல்லூரி நிர்வாகம் அளித்த பகீர் விளக்கம்
இந்துஸ்தான் கல்லூரியில் போதைப் பொருள் பயன்பாடு குறித்து புகார் அளித்த கல்லூரி மாணவன் அமுதன் (19) 20 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த மாணவர் அமுதனை சக மாணவர்களுடன் சேர்ந்து அடையாளம் தெரியாத கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கல்லூரியில் பயிலும் சக மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாடு குறித்தும், அதனை விற்பனை செய்யும் கும்பல் குறித்தும் அமுதன் காவல்துறையிடம் தகவல் தெரிவித்ததன் காரணமாகவே அவர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இவ்விவகாரத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமுதனின் மரணத்திற்கு நீதிக்கேட்டு சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் அமுதன் கொலை சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தனியார் கல்லூரி நிர்வாகம், “மாணவர் அமுதன் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. ஜூலை 21-ம் தேதி அமுதன் மற்றும் அஜீஷ் விடுதி சமையலரை தாக்கியுள்ளனர், சமையலரை தாக்கியதாக மாணவர் அமுதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜுலை 24ம் தேதி அமுதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உயிரிழந்த மாணவர் அமுதன் சஸ்பெண்டில் தான் இருந்தார், கடந்த 24-ம் தேதியே அமுதனை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தோம். மாணவன் அமுதனின் பெற்றோர் குற்றச்சாட்டில் உண்மையில்லை. மாணவர்கள் தாக்கிக்கொண்ட விவகாரம் பற்றி எங்களுக்கு தெரியாது. ஆக. 10ல் அமுதன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வந்தது. கைதான 5 மாணவர்களில் எங்கள் கல்லூரியை சேர்ந்த சிலர் உள்ளனர். 15 மாணவர்கள் பட்டியலை காவல்துறையிடம் வழங்கி உள்ளோம். போதைப் பொருள் தொடர்பாக எந்த புகாரும் இல்லை. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிவருகிறோம்." என்றனர்.