×

சினிமாவையே மிஞ்சும் கொடூரம்: 2017-ல் நடந்த பகீர் கொலை... 2026-ல் வெளியான அதிரடித் தீர்ப்பு!

 

நண்பர்களாகப் பழகி, தொழிலில் கைகோர்த்து, இறுதியில் பணத்திற்காக ஒரு உயிரையே பறித்த கொடூரச் சம்பவத்தில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடியான தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், இந்தக் கொலையில் தொடர்புடைய 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பின்னணி என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் (34) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது நண்பர் மகேஷ்குமார் (38). தொழில் நிமித்தமாக லட்சுமி நாராயணனிடம் மகேஷ்குமார் ரூ. 30 லட்சம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் இழுத்தடித்த மகேஷ்குமார், பணம் கேட்டுத் தொந்தரவு செய்த நண்பனைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டினார்.

சினிமா பாணி கொலை:

கடந்த 2017-ஆம் ஆண்டு, தேன்கனிக்கோட்டை நீதிமன்றம் அருகிலேயே வைத்து லட்சுமி நாராயணனை ஒரு கும்பல் காரில் கடத்தியது. பட்டப்பகலில் நடந்த இந்தக் கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடத்திச் செல்லப்பட்ட லட்சுமி நாராயணன், சம்பத் நகர் பகுதியில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக மகேஷ்குமார் உட்பட 7 பேரை தேன்கனிக்கோட்டை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கானது, ஓசூரில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு நடைபெற்று கொண்டிருந்த போதே ஒருவர் இறந்துவிட்டார். இதனிடையே, இவ்வழக்கில் வாத, பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ், கொலை குற்றம்சாட்டப்பட்ட மகேஷ்குமார், ராஜ்குமார், வெங்கடாசலபதி, ஹரீஷ், சுரேஷ், சுரேஷ் ஆகியோரை குற்றவாளி என அறிவித்தார். மேலும், அவர்கள் அனைவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அனைவருக்கும் தலா ரூ. 30,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.