×

"என்ன நடக்கிறது பள்ளிகளில்? வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக கூடாது” - கொந்தளித்த எம்.எஸ்.பாஸ்கர்!

 

தமிழ்நாட்டில் பத்ம ஷேசாத்ரி பள்ளியாசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவரால் பல்வேறு மாணவிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக புகார் கொடுக்கப்பட்டு தற்போது அவர் சிறையில் இருக்கிறார். இதற்குப் பின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளும் ஆசிரியர்கள் மீது புகார் தெரிவித்தனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அரசு, பள்ளியளவில் கமிட்டி அமைக்க வேண்டும், ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்கள் எப்படி வர வேண்டும் என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

தற்போது இது கொஞ்சம் கொஞ்சமாக செயல்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், கோவையில் அரங்கேறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் கடிதம் எழுதிவைத்து விட்டு 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. கடும் போராட்டங்களுக்குப் பின் உயிருடன் இருக்கும்போது மாணவியின் புகார் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்தான விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்க, பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதற்கு முன்பு சென்னையில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை. மற்றுமொரு தனியார் பள்ளியில் சின்னஞ்சிறு மழலைகளை ஒரு ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கும் வீடியோ. தற்போது கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் அந்த மாணவி தாள முடியாத மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை.

என்ன நடக்கிறது பள்ளிகளில்? குழந்தைகள் படிப்பதா இல்லையா? சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை விட செய்தே ஆக வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட கயவர்களுக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராகக்கூடாது. அந்த வக்கிரபுத்தி கொண்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டே ஆக வேண்டும். அதுவும் விரைவாக. இதுவே என் வேண்டுகோள்” என்று குறிப்பிட்டுள்ளார்.