×

என்எல்சிக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்தும் திட்டம் இல்லை- அமைச்சர் உறுதி

 

என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு கூடுதலாக நிலம் கையகப்படுத்தும் திட்டம் தற்போது எதுவும் இல்லை என வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி இந்தியா நிறுவனம் பொதுமக்களிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தி சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது புதிய சுரங்கங்கள் அமைக்கவும் பழைய சுரங்கங்களை விரிவாக்க செய்யவும் புதிதாக நிலங்கள் கையகப்படுத்தப்பட போவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த நிலையில் தற்போது புதிய நிலம் கையகப்படுத்துவதற்கு கிராம மக்கள் தொடர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில் ஏற்கனவே நிலம் கையகப்படுத்த பட்டவர்களுக்கான இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணை இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்பொழுது பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தை சந்தித்து, என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசு ஈடுபடக்கூடாது எனவும் ஏற்கனவே நிலத்தை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என்றும் கோரிக்கை மனுவை அளித்தனர். 

அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், “என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு நிலம் மற்றும் வீடுகள் கொடுத்தவர்களுக்கான இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்புக்கான உத்தரவுகள் தற்போது வழங்கப்பட்டது. என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு 25,000 ஏக்கர் நிலம் தேவை, அது கையகப்படுத்தப்பட உள்ளதாக வரும் தகவல் துளி அளவும் உண்மை இல்லை. என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு 25000 ஏக்கருக்கு மட்டுமே ஐந்து ஆண்டுகளுக்கு தேவை என்ற நிலையில், அது ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு விட்டது, நிலம் கொடுத்தவர்களில் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க என்எல்சி இந்தியா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது” என்றார்.