×

விஜய்க்கு எம்பி திருமாவளவன் கடும் கண்டனம்!

 

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது உரையாற்றிய முதலமைச்சர் விஜய், மிசா சட்டத்தில் கைதானவர்கள் குறித்துப் பேசுகையில் தனது தாடைப் பகுதியில் கை வைத்து மு.க.ஸ்டாலினைப் போல ஆக்கச் செய்கை செய்தார். இதற்கு ‘உள்நோக்கம் எதுவுமில்லை’ என முதலமைச்சர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் விமர்சனங்களுக்கும் ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் செயல்பாடுகளுக்கும் வித்தியாசம் உள்ளதாகக் குறிப்பிட்ட திருமாவளவன், “வயதில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் முதன்மையானது. அதிகார வலிமையில்லாத எளிய மனிதரைக் கூடக் காயப்படுத்தும் அணுகுமுறை ஏற்புடையதல்ல. எனவே, மாண்புமிகு முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர் இனிவரும் காலங்களில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

மேலும், சட்டப்பேரவை விவாதத்தின் போது மிசா கொடுமைகள் குறித்துப் பேசுகையில் இடைமறித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர், “வரலாற்றுப் பிழையான கருத்துகளைப் பதிவு செய்தது கண்டனத்திற்குரியது” என்றும், அமைச்சர் தனது உரையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சர் விஜய்யின் இந்த உடல்மொழி விவகாரத்தில் திமுகவைத் தொடர்ந்து தோழமைக் கட்சியான விசிகவும் கண்டனம் தெரிவித்துள்ளது அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.