×

மும்மொழித் திட்டம் திரும்பப்பெறப்படவில்லை - ரவிக்குமார் 

 

மும்மொழித் திட்டம் என்ற இந்தி/ சமஸ்கிருதத் திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறிவரும் நிலையில் அந்த எதிர்ப்பைக் கூர் மழுங்கச் செய்வதற்கு ஒன்றிய அரசு செய்யும் தந்திரம்தான் இந்த அறிவிப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தனது எக்ஸ் தளத்தில், “ஒன்றிய அரசு சிபிஎஸ்இ பள்ளிகளில் புகுத்தியிருக்கும் மும்மொழித் திட்டம் தற்காலிகமாகத் திரும்பப் பெறப்பட்டதுபோன்ற ஒரு தோற்றம் சில ஊடகங்களின் செய்திகள் மூலம் உருவாகியிருக்கலாம். மும்மொழித் திட்டம் திரும்பப்பெறப்படவில்லை. சிபிஎஸ்இ  அதைத் தொடர்ந்து செயல்படுத்துவதாகவே அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதால் தமிழ்நாட்டு மாணவர்களைக் குழப்புவதுபோல ஒரு அறிவிப்பை அது வெளியிட்டுள்ளது. 

• 2026-27 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது என்றும், அவர்கள் தொடர்ந்து இரண்டு மொழிகளைக் கொண்ட பழைய முறையையே பின்பற்றுவார்கள் என்றும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
• இப்பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மூன்றாவது மொழியைப் பயில வேண்டிய அவசியமில்லை.” என்றும் கூறியுள்ள சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பில் தற்போது பயிலும் மாணவர்கள் 3 மொழியைப் படிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. 

“ நீங்கள் இரண்டு அயல் மொழிகளைப் (non-native languages) பயில்கிறீர்கள்.
உதாரணம்: ஆங்கிலம் + பிரெஞ்சு.
2026-27 ஆம் கல்வியாண்டில் ஏற்கனவே ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒரு சிறப்பு மற்றும் ஒருமுறைக்குரிய தளர்வு நடவடிக்கையாக, நீங்கள் அந்த இரண்டு அயல் மொழிகளையும் தொடர்ந்து பயிலலாம்; அத்துடன் மூன்றாவது மொழியாக (R3) ஒரு 'பாரதிய பாஷா'வை (இந்திய மொழியை) கூடுதலாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.” என்று கூறியுள்ள சிபிஎஸ் இ அந்த மூன்றாவது மொழிக்கு இந்த மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும்போது தேர்வு கிடையாது என்கிறது. 

“ மூன்றாம் மொழி (R3) உங்கள் பள்ளியால் நடத்தப்படும் பள்ளி அளவிலான அக மதிப்பீட்டின் (internal assessment) மூலமாக மட்டுமே மதிப்பிடப்படும்.
• இப்பிரிவு மாணவர்கள் 2027-28 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிற்குச் செல்லும்போது, ​​இந்த மூன்றாம் மொழிக்கு CBSE வாரியத் தேர்வுகள் எதுவும் இருக்காது.” 
எனக் கூறியுள்ளது. ஆனால், மற்ற வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு முன்பு அறிவித்தவாறு ஆங்கிலம் அல்லாமல் இரண்டு இந்திய மொழிகள் கற்பிக்கப்படும். அதாவது இந்தியோ சமஸ்கிருதமோ கட்டாயம்.  மூன்று மொழிகளைக் கற்பிக்க ஆசிரியர்களை அமர்த்துவதால் செலவு அதிகரிக்குமே என்ற பள்ளி நிர்வாகத்தினரின் கவலையையும் சிபிஎஸ்இ போக்கியிருக்கிறது. அதன் அறிவிப்பில் நெகிழ்வான பணியாளர் நியமன ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பள்ளிகள், தற்போதுள்ள ஆசிரியர்களையோ, ஓய்வுபெற்ற ஆசிரியர்களையோ, முதுகலைப் பட்டதாரிகளையோ பணியமர்த்தலாம்.  அல்லது, சஹோதயா கிளஸ்டர்கள் எனத் தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்படும் அருகாமையிலுள்ள பள்ளிகளின் ஆசிரியர்களைப் பயன்படுத்தும் முறையைக் கடைபிடிக்கலாம். அல்லது, இணையவழியிலோ , நேரடியாகவும் இணையவழியிலும் கற்பிக்கும் கலப்புமுறையையோ ( hybrid method)  பயன்படுத்தலாம் “ என்று கூறப்பட்டுள்ளது. இது மொழிப் பாடம் பயில்வதை முற்றாக ஒழித்துக் கட்டிவிடும். 

மும்மொழித் திட்டம் என்ற இந்தி/ சமஸ்கிருதத் திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறிவரும் நிலையில் அந்த எதிர்ப்பைக் கூர் மழுங்கச் செய்வதற்கு ஒன்றிய அரசு செய்யும் தந்திரம்தான் இந்த அறிவிப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.