×

வாகன ஓட்டிகளே உஷார்..! 30 கி.மீ வேக வரம்பு கட்டாயம்... அதிரடி அறிவிப்பு..!

 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் வெளியிட்ட அறிவிப்பின்படி, திருநெல்வேலி மாநகராட்சி, வண்ணாரப்பேட்டை பகுதியில் இன்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். ஆய்வில், மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, திருநெல்வேலி மாநகராட்சி வண்ணாரப்பேட்டை ரவுண்டானா பகுதியில் சமீபத்தில் நடந்த விபத்தில் தனியார் பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

இதுபோன்ற விபத்துகள் இனிவரும் காலங்களில் நிகழாமல் தடுக்கும் வகையில் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏதுவாக, மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து விபத்து குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற துறைசார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாதாள சாக்கடைப் திட்ட பணிகளைப் பொறுத்தவரை, ஒரு மேன்ஹோல் முதல் அடுத்த மேன்ஹோல் வரையிலான பணிகளை சீரமைத்து முழுமையாக நிறைவு செய்து, சாலையை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்த பின்னரே அடுத்த இடத்தில் தோண்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

மாநகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தோண்டப்பட்ட சாலைகளை விரைந்து சீரமைத்து, மீதமுள்ள சாலை பணிகளை இன்னும் ஒரு வார காலத்திற்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் வழித்தட விதிமீறல், நேர விதிமீறல் மற்றும் அதிவேக இயக்கம் தொடர்பான புகார்கள் தொடர்ந்து பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 வண்ணாரப்பேட்டை விபத்தில் தொடர்புடைய தனியார் பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டதே விபத்திற்குக் காரணமாக இருந்துள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய தனியார் பேருந்தின் இயக்க உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்துத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நகர எல்லைக்குள் வாகனங்களுக்கான வேக வரம்பு மணிக்கு 30 கிலோ மீட்டர் மட்டுமே வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தாலும், போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்துகள் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது எவ்வித பாரப்பட்சமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.