×

புதுமாப்பிள்ளைக்கு 290 வகையான உணவுகளைப் பரிமாறி அசத்திய மாமியார்..!

 

விசாகப்பட்டினம் மாவட்டம் நர்சிப்பட்டினத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் - கலாவதி தம்பதியினர், தங்களது மருமகனுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு சங்கராந்தி விருந்தை அளிக்கத் திட்டமிட்டனர். கடந்த ஆண்டுதான் இவர்களது மகளுக்குத் திருமணம் முடிந்திருந்தது என்பதால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையைச் சிறப்பான முறையில் கொண்டாட அவர்கள் முடிவு செய்தனர்.

மருமகனுக்காக மாமியார் கலாவதி தனது கைப்படவே 290 வகையான உணவுகளைத் தயாரித்து அசத்தியுள்ளார். இந்த விருந்தில் ஆட்டுக்கறி, கோழி, மீன் மற்றும் முட்டை உள்ளிட்ட பல்வேறு அசைவ உணவுகள் மட்டுமின்றி, ஆந்திராவின் பாரம்பரிய இனிப்புகள் மற்றும் கார வகைகளும் இடம்பெற்றிருந்தன. பார்ப்பவர்களை வியக்க வைக்கும் வகையில், இந்த உணவுகள் அனைத்தும் ஒரு பெரிய அறை முழுவதும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இந்த விருந்தை ஒரு 'சர்ப்ரைஸ்' ஆக அளிக்க விரும்பிய குடும்பத்தினர், மருமகனின் கண்களைத் துணியால் கட்டி அந்த அறைக்குள் அழைத்து வந்தனர். கண்கட்டுகளை அவிழ்த்தவுடன், தனக்காகத் தயார் செய்யப்பட்டிருந்த 290 வகை உணவுகளைக் கண்டு அவர் திகைத்துப் போனார். எதை முதலில் சாப்பிடுவது என்று தெரியாமல் அவர் மகிழ்ச்சியில் திளைத்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திராவில் சங்கராந்தி (பொங்கல்) பண்டிகையின் போது புதுமாப்பிள்ளைகளுக்கு இதுபோன்று 100-க்கும் மேற்பட்ட உணவுகளைப் பரிமாறிச் சிறப்பிப்பது ஒரு கௌரவமான பாரம்பரியமாகப் பார்க்கப்படுகிறது. அந்தப் பாரம்பரியத்தைப் பின்பற்றி, இந்த ஆண்டு பல இடங்களில் இத்தகைய பிரம்மாண்ட விருந்துகள் நடைபெற்றாலும், 290 வகைகளுடன் நர்சிப்பட்டினத்தில் அளிக்கப்பட்ட இந்த விருந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.