திருமணம் முடிந்த 6 மாதங்களில் பிரிந்து சென்ற கணவர்- 2 வயது குழந்தையை கொன்று, தாயும் தற்கொலை
நெல்லை பாளையங்கோட்டை நடுவக்குறிச்சி பகுதியில் குடும்ப பிரச்சனையில் இரண்டரை வயது மகளைக் கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் தங்கம் (வயது 21). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தட்டான் குளத்தைச் சேர்ந்த மகாராஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திருமணம் முடிந்த ஆறு மாதங்களில் மகாராஜன் தனது மனைவி தங்கத்தை விட்டு பிரிந்து சென்றிருக்கிறார். இதனால் மன உளைச்சலில் தங்கம் தனது தாய் வீடான நடுவக்குறிச்சி பகுதியில் இரண்டரை வயது மகளுடன் வசித்து வந்திருக்கிறார். இருந்த போதிலும் தினமும் மன உளைச்சலிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு தங்கம் மற்றும் தனது இரண்டரை வயது மகள் தங்களது அறையில் தூங்கி உள்ளனர்.
இன்று அதிகாலை அதிக மன உளைச்சலில் இருந்த தங்கம் தனது இரண்டரை வயது மகளை கொன்று, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த அவர்களது குடும்பத்தினர் பாளையங்கோட்டை தாலுகா காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரயோக பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் குடும்ப பிரச்சனை காரணமாக தாய் மகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.