சிறுமிக்குப் பாலியல் துன்புறுத்தல் : தாய்க்கும் வளர்ப்புத் தந்தைக்கும் 180 ஆண்டு சிறை..!
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அச்சிறுமியின் தாயார் 2019ல் தன் முதல் கணவரைப் பிரிந்து, பாலக்காடு மாவட்டம், செர்புலச்சேரியைச் சேர்ந்த ஓர் இளையருடன் ஓட்டம் பிடித்தார். பாலக்காடு முதல் மலப்புரம் வரை அவர்கள் பலமுறை இடம் மாறி வசித்தனர்.
அந்தக் காலகட்டத்தில், அப்பெண்ணின் முதல் கணவருக்குப் பிறந்த பெண் பிள்ளையை அந்த ஆடவர் பலமுறை வன்கொடுமைக்கு ஆளாக்கினார். அத்துடன், தாயும் வளர்ப்புத் தந்தையும் நெருக்கமாக இருந்ததையும் கைப்பேசியில் ஆபாசக் காணொளிகளையும் பார்க்குமாறு அச்சிறுமி வற்புறுத்தப்பட்டார்.
அச்சிறுமியின் தந்தைவழித் தாத்தா அவளைப் பார்க்க முயன்றபோது, அவளின் தாயும் அவரின் காதலனும் அவரைத் தடுத்தனர். அதனைத் தொடர்ந்து, அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது.
அக்கம்பக்கத்தில் வசித்தோர் தலையிட்டு, அச்சிறுமி அடிக்கடி அடித்து உதைக்கப்படுவதாகவும் அவருக்கு உணவு மறுக்கப்படுவதாகவும் கூறினர். அதனைத் தொடர்ந்து, அச்சிறுமியின் தாத்தா காவல்துறையில் புகாரளித்தார்.
அதன் அடிப்படையில், மலப்புரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அச்சிறுமியின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்தார். அதனையடுத்து, அச்சிறுமியின் தாயும் வளர்ப்புத் தந்தையும் கைதுசெய்யப்பட்டனர். குற்றம் உறுதிப்படுத்தப்பட்ட அவ்விருவரும் தவனூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.