விளம்பரங்களுக்கே ரூ.100 கோடிக்கு மேல்! அ.தி.மு.க-வின் அதிரடி தேர்தல் செலவு அறிக்கை! ரூ.149 கோடியுடன் முதலிடத்தில் தி.மு.க!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை பொருத்தவரை, தேர்தலின்போது சம்பந்தப்பட்ட தொகுதியின் வேட்பாளர் அதிகபட்சமாக 40 லட்சம் ரூபாய் வரை தேர்தல் பிரச்சாரத்திற்காக செலவு செய்து கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்பாளர் மனுத்தாக்கல் செய்வதற்கு முன்பாகத் தேர்தலுக்காக மட்டுமே தனியாக ஒரு வங்கித் கணக்கைத் தொடங்க வேண்டும். பரப்புரைக்கான அனைத்து வருவாய் மற்றும் செலவுகளையும் இந்த கணக்கு மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், தனிநபர் வேட்பாளர்களின் செலவுகளுக்கு மட்டுமே இந்த வரம்பு பொருந்தும். அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் விளம்பரம் மற்றும் பரப்புரைக்காக செலவிடும் ஒட்டுமொத்தத் தொகைக்கு அதிகபட்ச வரம்பு எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, பரப்புரைகளின்போது நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள், ஒலிபெருக்கி மேடைக்கு ஆகக்கூடிய செலவுகள், வாகனங்கள், எரிபொருள் செலவுகள், போஸ்டர்கள், பேனர்கள், துண்டு பிரசுரங்கள், விளம்பர பொருட்களுக்கு ஆகக்கூடிய செலவுகள், தேர்தல் முகவர்கள் மற்றும் கட்சி சார்ந்த ஊழியர்களுக்கான செலவுகள் என பல்வேறு செலவுகள் இதில் அடங்குகிறது.
இதன் பிறகு தேர்தல் முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டப்பின், குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வேட்பாளர்கள் தாங்கள் தேர்தல் பரப்புரையில் செலவிடப்பட்ட முழுமையான வரவு செலவு கணக்கை, அதற்கான ரசீதுகள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
அவ்வாறு தாக்கல் செய்ய தவறினாலோ அல்லது தவறான தகவல்களை அளித்தாலோ, சம்பந்தப்பட்ட நபர் அடுத்த மூன்று ஆண்டுகள் வரை எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாதவாறு, தேர்தல் ஆணையம் தகுதிநீக்கம் செய்துவிடும்.
2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைச் பொதுத்தேர்தலுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க) செய்த மொத்த தேர்தல் செலவுகள் குறித்த அதிகாரப்பூர்வ தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கையை, அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) சமர்ப்பித்துள்ளார்.
அ.தி.மு.க செய்த செலவு என்ன?
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த செலவின அறிக்கையில், அ.தி.மு.க-வின் நிதி, வரவு-செலவு, பரப்புரைச் செலவுகள், வேட்பாளர்களுக்கான விளம்பரச் செலவுகள் மற்றும் வங்கிக் கணக்கு இருப்பு விவரங்கள் விரிவாக இடம்பெற்றுள்ளன.
அதன்படி, பரப்புரையின் பெரும்பகுதி தொகையான ரூ. 103.98 கோடியை (103,98,60,490 ரூபாய்) சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி மற்றும் இணையதள விளம்பரங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளதாக அ.தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் அறிக்கை புத்தகங்கள் அச்சிடுதல், நோட்டீஸுகள், கொடிகள், பேனர்கள் உள்ளிட்டவைகளுக்கு ரூ. 4.11 கோடி செலவிடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை பயணச் செலவுக்கு 1,75,000 ரூபாயும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்திற்கு ஆன டீசல் செலவு 4,14,741 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னணி நட்சத்திரப் பேச்சாளர்களான முனைவர் எஸ்.எஸ். வைகைச்செல்வன், விந்தியா, கௌதமி, இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், ரவி மரியா, காயத்ரி ரகுராம், கோபி காளிதாஸ், பேராசிரியர் கல்யாணசுந்தரம், சிங்கமுத்து, ஆர். சுந்தர்ராஜன், நிர்மலா பெரியசாமி, அப்சரா ரெட்டி, காளியம்மாள் ஆகிய 13 நட்சத்திரப் பேச்சாளர்களின் பிரச்சாரப் பயணங்களுக்காக ரூ. 17.37 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்கள், மேடை ஒலிபெருக்கி அமைப்புகள் மற்றும் ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகச் செலவுகளுக்காக ரூ. 1.28 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை நாளிதழ்கள், மற்றும் செய்தித் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்த ரூ. 2.78 கோடி, என் ஆக மொத்தம் அதிமுக செய்த மொத்த செலவு 109,61,81,982 கோடி ரூபாய் என கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கு அறிக்கையை அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உறுதிமொழி அளித்து கையொப்பமிட்டுள்ளார்.
அ.தி.மு.க-வை முந்திய தி.மு.க
இதேபோல் நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவை பொது தேர்தலில், தி.மு.க தேர்தல் பரப்புரைக்காக 149 கோடி ரூபாயை செலவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தேர்தல் விளம்பரத்திற்காக மட்டும் ரூபாய் 70.69 கோடி ரூபாயை திமுக செலவு செய்துள்ளனர் என்றும் திமுக நட்சத்திர பேச்சாளர்களின் பயணத்திற்கு 5.90 கோடி ரூபாயும், பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்து கயிறுப்பாக ரூபாய் 319 கோடி ரூபாய் உள்ளதாகவும் திமுக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல் நாம் தமிழர் கட்சி ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை தேர்தல் பிரச்சாரத்திற்காக செலவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
குறிப்பாக தேர்தல் நேரங்களில் கட்சி சார்பில் தேர்தல் நிதியாக குறிப்பிட்ட தொகையானது வசூலிக்கப்படுவது வழக்கம். அவ்வாறு வசூலிக்கப்பட்ட தொகைகள் எந்தெந்த ரீதியாக பெறப்பட்டது; எந்த வங்கிகளில் வரவு வைக்கப்பட்டது; எந்த வங்கிகளில் இருந்து அந்தப் பணங்கள் செலவு செய்யப்பட்டது என்ற விரிவான வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சியினர் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.