×

தவெக மாநாட்டில் 300க்கும் மேற்பட்டோர் மயக்கம்

 

தவெக மாநாட்டில் கடுமையான வெயில், குடிநீர் பற்றாக்குறை காரணமாக 300-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்துள்ளனர். 

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், புதிதாக அரசியல் களம் கண்டுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் , முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க பல்வேறு வியூகங்களை வகுத்து களப்பணி ஆற்றி வருகிறது. அந்தவகையில் தென்மாவட்டங்களை மையப்படுத்தி அக்கட்சியின் 2வது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெற இருக்கிறது. மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரபத்தி என்னுமிடத்தில் மிக பிரம்மாண்டமாக இன்று பிற்பகல் 4 மணிக்கு தொடங்கி இரவு 7.25 மணி வரை மாநாடு நடைபெறவுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இரவு முதலே தொண்டர்கள் மதுரையில் குவிந்து வருகின்றனர்.  மாநாடு திடம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டுவருகிறது. விஜய்யை ரசிகர்கள் நெருங்காத வகையில் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 

இந்நிலையில் தவெக மாநாட்டில் குடிநீரின்றி வெயிலின் தாக்கத்தால் 374 பேர் மயங்கினர். மருத்துவ முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலுதவி அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் 12 பேர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.